8 மணி நேர வேலைக்கு எதிர்ப்பு : திருப்பூரில் மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2 மணி நேரம் வேலை என்று சொல்லி பணிக்கு அமர்த்திவிட்டு, நாள்தோறும் 8 மணி நேரத்துக்கு மேல் வேலை வாங்குவதை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் திருப்பூரில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் மகாலட்சுமி தலைமை வகித்தார். மாநில செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு மாவட்ட தலைவர் மூர்த்தி, துணைத் தலைவர் பாலன், துணை செயலாளர் அன்பு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில் பங்கேற்ற ஊழியர்கள் பேசியதாவது: மாத ஊதியம் ரூ.5500-ஐ ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். தற்போது ஊழியர்களுக்கு வழங்கு மாத ஊதியம், மிகவும் தாமதமாக வழங்குவதால் மாதந்தோறும் 5ம் தேதி வழங்க வேண்டும். ஸ்கோர் சீட் என்ற பெயரில் ஊதியம் பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும். 2 மணிநேரம் என வேலை அமர்த்தி, 8 மணி நேரத்துக்கு மேலாகவும், பண்டிகை, வார விடுமுறையின்றி வேலை வாங்குவதை முறைப்படுத்த வேண்டும். பணி வரன்முறை செய்ய வேண்டும்.

அனைத்து ஊழியர்களுக்கும் மகப்பேறு கால ஊதியத்துடன் கூடிய விடுப்பு, தற்செயல் விடுப்பு, தேசிய பண்டிகை விடுமுறையின் போது பணிக்கு வர நிர்பந்திக்கக் கூடாது. பணி காலத்தில் விபத்தில் சிக்கியவர்களூக்கு உரிய சிகிச்சை அளிக்க பொறுப்பேற்க வேண்டும். மரணம் அடைந்த ஊழியர்களின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இஎஸ்ஐ, பிஎப் திட்டத்தை அமலாக்க வேண்டும். தீபாவளி பண்டிகை செலவுக்கு ஒரு மாதம் சம்பளம் முன் பணமாகவும், ஒரு மாத சம்பளம் ஊக்கத் தொகையாகவும் வழங்க வேண்டும்.

ஆண்டுக்கு 2 செட் சீருடை, அடையாள அட்டை வழங்க வேண்டும். போக்குவரத்துப் படி, மலை பகுதிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வன விலங்குகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள வாகன வசதி உட்பட பல்வேறு கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊழியர்கள் கூறினர். மேலும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.