சேலத்தில் தலைமைக் காவலரின் மனைவி, தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் கோவிந்தராஜ் (38). இவரது மனைவி சங்கீதா (27). இவர்களுக்கு ரோஹித் (8), தர்ஷினி (4) என இரண்டு குழந்தைகள். ரோஹித் மூன்றாம் வகுப்பும், தர்ஷினி எல்கேஜியும் படித்து வந்தனர். கோவிந்தராஜ் தனது குடும்பத்தினருடன் கொண்டலாம்பட்டி காவல் நிலையம் அருகே உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு கோவிந்தராஜின் வீட்டில் இல்லாத சமயத்தில், அவரது மனைவி சங்கீதா தூக்கில் நிலையிலும், அருகே அவரது குழந்தைகள் இருவரும் என அவனைவரும் சடலமாக கிடந்துள்ளனர். இதனை அறிந்த அருகில் வசிப்பவர்கள் உடனே கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மூவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கொண்டலாம்பட்டி உதவி கமிஷனர் முரளி விசாரணை நடத்திட, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவிட்டுள்ளார்.
போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்து, சங்கீதா அவரது இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு பின்னர் அவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இதனிடையே தலைமைக் காவலர் கோவிந்தராஜும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரை மீட்ட போலீஸார், தற்போது அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.