அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நவ.15-க்கு ஒத்திவைப்பு

அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மறு விசாரணையை நவம்பர் 15-ம் தேதிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

2006 – 2011 திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து இருவரையும் விடுதலை செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் சீராய்வு மனுவை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்றம், அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோரை விடுவித்த உத்தரவை ரத்து செய்ததுடன், வழக்கை முதலில் இருந்து தினமும் மீண்டும் விசாரணை நடத்தி முடிக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், வழக்கு விசாரணையை நவம்பர் 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.