“நீங்கள் அனைவரும் தாய் – தந்தை கால்களில் மட்டும்தான் விழ வேண்டும். வேறு யாருடைய காலிலும், நீங்கள் விழக்கூடாது. இனிவரும் காலங்களில் நமது கட்சியினர் இதை பின்தொடர வேண்டும்” என்று ஆத்தூரில் நடைபெற்ற தவெக முதல் மாநில மாநாட்டுக்கான அரசியல் பயிலரங்க கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் கூறியுள்ளார் .
தவெக முதல் மாநில மாநாட்டு குழுக்கள் மற்றும் தற்காலிக தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான அரசியல் பயிலரங்கம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (அக்.18) நடைபெற்றது. இதில் வரவேற்பு உரையாற்றிய, அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் பேசியதாவது: அடுத்த வாரம், தவெக-வின் வெற்றி மாநாட்டில், தலைவர் விஜய் உங்களைச் சந்திக்கவிருக்கிறார். இன்று தவெகவின் அரசியல் பயிலரங்கம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக, சிறப்பு அழைப்பாளர்கள் பலர் வந்துள்ளனர். தலைவரின் உத்தரவுக்கிணங்க, நாம் அனைவரும் இங்கு குழுமி இருக்கிறோம்.
ஆரம்பத்தில், நாம் ரசிகர் மன்றங்களாக இருந்தோம். பின்னர் நற்பணி மன்றாக இருந்தோம். அதன்பிறகு, மக்கள் இயக்கமாக மாறினோம். இன்று தமிழக வெற்றிக் கழகமாக, அரசியலுக்கு வந்திருக்கிறோம். தலைவர் விஜய்யின் கடினமான உழைப்பால், தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும், தவெக-வின் கொடி பறந்துகொண்டிருக்கிறது.
பல நாட்களாக நான் சொல்ல வேண்டும் என்று விரும்பியதை, இந்த பயிலரங்கத்தின் வாயிலாக நான் கூற ஆசைப்படுகிறேன். இதைத்தான் இனிவரும் காலங்களில் நாம் பின்தொடர வேண்டும்.முதலில், நீங்கள் அனைவரும் தாய் – தந்தை கால்களில்தான் விழ வேண்டும். வேறு யாருடைய கால்களிலும், இனிவரும் காலங்களில் நீங்கள் விழக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, விழுப்புரம் மாநாட்டு ஏற்பாடு நிகழ்வுகளை ஆய்வு செய்த ஆனந்தை காணவந்த கட்சியினர் அவரது காலில் விழும் காட்சிகள் குறித்து செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில் இன்று அவர் காலில் விழ வேண்டாம் என்று கட்சியினரும் வலியுறுத்தியுள்ளது கவனம் பெற்றுள்ளது.
தொடர்ந்து பேசிய அவர், “சேலம் மாவட்டத் தலைவரிடம் மிக குறுகிய காலத்தில்தான் இக்கூட்டம் தொடர்பாக கூறினேன். அனைத்து ஏற்பாடுகளையும் அவர் சிறப்பாகச் செய்துள்ளார். வரவேற்பு பேனர் ஒன்றில், நிரந்தரப் பொதுச் செயலாளர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தலைவர் எனக்கு பொதுச் செயலாளர் பொறுப்புதான் கொடுத்துள்ளார். அது நிரந்தரமா இல்லையா என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியவர், நம்முடைய தலைவர் விஜய்தான். நான், கடந்த 15-20 ஆண்டுகளுக்கு முன்பே, சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவியில் இருந்திருக்கிறேன். இந்த பதவிகள் எல்லாம், 5 வருடங்களுக்கு ஒருமுறை வரும், போகும்.
தலைவர் விஜய்யின் ரசிகர் என்ற பதவி, கடைசி காலம் வரை இருக்கும். அந்த ரசிகர் என்ற பதவியின் காரணமாகத்தான், இன்று தலைவர் விஜய் என்னை இந்த இடத்தில் நிறுத்தியிருக்கிறார். பொதுச் செயலாளர் என்பது ஒரு முகவரிதான்.” என்று தெரிவித்தார்.