கள்ளக்குறிச்சி மாவட்டம் வெள்ளிமலை உள்ளிட்ட இடங்களில் அரசு புதிதாக டாஸ்மாக் கடைகளைத் திறந்தால் நானே அந்தக் கடைகளுக்கு பூட்டுப் போடுவேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
இது தொடர்பாக திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியது: “திமுக அரசு முதன்மை வாக்குறுதியாக அளித்த ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்காததால் ஆசிரியர்களுக்கு செம்டம்பர் மாதம் 10 நாட்களுக்கு பிறகு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. கல்வி, சுகாதார திட்டங்களை செயல்படுத்த நிதி ஒரு தடையில்லை.
2030-ம் ஆண்டில் பள்ளி கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 4.15 லட்சம் கோடியாகவும், சுகாதாரத் துறைக்கு ரூ.1.61 லட்சம் கோடியாகவும் இருக்கும். அதன்படி பார்த்தால் இந்த ஆண்டு கல்விக்கான நிதி ஒதுக்கீடு ரூ.1.56 லட்சம் கோடியாகவும், சுகாதாரத்துறைக்கு 60 ஆயிரம் கோடியாகவும் இருக்கவேண்டும். ஆனால் தற்போது கல்வித்துறைக்கு ரூ.44 ஆயிரம் கோடியாகவும், சுகாதாரத்துறைக்கு ரூ. 20,198 கோடியாகவும் உள்ளது.
பள்ளிக் கல்வித்துறையும் சுகாதாரத்துறையும் சீரழிய போதுமான நிதியை ஒதுக்காததே காரணம். அதனால் தான் போதிய ஆசிரியர்களை நியமிக்கவில்லை. முதன்மை மருத்துவமனைகளில் உயிர் காக்கும் மருந்துகள் இல்லை. எனவே, பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 1 லட்சம் கோடியும், சுகாதாரத்துறைக்கு ரூ. 50 ஆயிரம் கோடியும் வரும் நிதியாண்டில் நிதியை உயர்த்தவேண்டும்.
சென்னையின் பல இடங்களில் இன்னமும் வெள்ளம் வடியவில்லை. வெள்ளத்தடுப்பு நடவடிக்கையில் திமுக அரசு படுதோல்வி அடைந்துவிட்டது. வெள்ளத்தடுப்பு பணிகளை முடிக்காததால் மழை வந்தாலே மக்கள் அஞ்சி நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்கவேண்டும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 195 டாஸ்மாக் கடைகள் உள்ளது.
இதில், விழுப்புரத்தில் 109, கள்ளக்குறிச்சியில் 86 கடைகள் உள்ளது. தற்போது கொந்தமூர், நல்லாவூர், வெள்ளிமலை ஆகிய இடங்களில் 3 மதுக்கடைகளை திறக்கவிருப்பது கண்டிக்கத்தக்கது. படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாகக் கூறும் அரசு, அதற்கு மாறாக புதிதாக மதுக் கடைகளை திறப்பதை ஏற்க முடியாது. இது அரசின் தோல்வியை காட்டுகிறது.
வெள்ளிமலையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க டாஸ்மாக் கடை திறக்கப்படுவதாக கூறுவது அரசின் தோல்வியை காட்டுகிறது. இதையும் மீறி அங்கே மதுக் கடைகளைத் திறந்தால் நானே அந்தக் கடைகளுக்கு பூட்டுப் போடுவேன். மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக அரசும் 3 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்கி, பழைய ஓய்வூதிய திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும்” என்று ராமதாஸ் தெரிவித்தார்.