“மதரஸாக்களை மூட வேண்டும் என்று ஒருபோதும் கோரவில்லை என்றும், ஏழை முஸ்லிம் குழந்தைகளின் கல்வியை அவை பறிப்பதால் அவற்றுக்கு அரசு வழங்கும் நிதியுதவியை நிறுத்த மட்டுமே பரிந்துரைத்திருக்கிறோம்” என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR) தலைவர் பிரியங்க் கனூங்கோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “முஸ்லிம்கள் அதிகாரம் பெறுவதைக் கண்டு அஞ்சும் ஒரு பிரிவினர் நமது தேசத்தில் உள்ளனர். பொறுப்புக்கூறலையும், சம உரிமையையும் அதிகாரம் பெற்ற சமூகங்கள் கோரும் என்பதால், இத்தகைய அச்சம் உருவாகிறது.
கல்வி சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு இதுவே முதன்மைக் காரணம். மதரஸாக்கள் மூடப்படுவதை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்கவில்லை. வசதி படைத்த குடும்பங்கள், தங்கள் குழந்தைகள் வழக்கமான கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஏழை குழந்தைகளுக்கும் அதேபோன்ற கல்வி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.
குழந்தைகள் வழக்கமான கல்வி பெறுவதை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும். அரசு கண்மூடித்தனமாக இருக்க முடியாது. ஏழை முஸ்லிம் குழந்தைகள் பெரும்பாலும் மதச்சார்பற்ற கல்விக்குப் பதிலாக, மதரசாக்களில் சேர வற்புறுத்தப்படுகிறார்கள். இதன்மூலம், அவர்களின் வாய்ப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறார்கள்.
ஏழை முஸ்லிம் குழந்தைகளை பள்ளிகளுக்குப் பதிலாக மதரஸாக்களுக்குச் செல்லும்படி ஏன் கட்டாயப்படுத்த வேண்டும்? இந்தக் கொள்கை அவர்கள் மீது அநியாயமாக திணிக்கப்படுகிறது.
அரசியலமைப்புச் சட்டம் 1950 இல் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, நாட்டின் முதல் கல்வி அமைச்சரான மவுலானா ஆசாத், உத்தரப் பிரதேசத்தில் உள்ள மதரஸாக்களுக்குச் சென்று, பள்ளி மற்றும் கல்லூரிகளில் முஸ்லிம் குழந்தைகள் உயர்கல்வி படிக்கத் தேவையில்லை என்று அறிவித்தார். உயர்கல்வியில் முஸ்லிம் மாணவர்களின் பிரதிநிதித்துவத்தை கணிசமாகக் குறைக்க இது வழிவகுத்தது. உயர்கல்வியில் படிக்கும் மாணவர்களில் சுமார் 13 முதல் 14% பேர் பட்டியல் சாதியினர் (SC). ஐந்து சதவீதத்திற்கும் அதிகமானோர் பட்டியல் பழங்குடியினர் (ST). ஒருங்கிணைந்த, SC மற்றும் ST மாணவர்கள் 20 சதவிகிதம் பேர் உயர்கல்வி படிக்கின்றனர். உயர்கல்வி மக்கள் தொகையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) 37 சதவீதமாக உள்ளனர். அதே சமயம் உயர்கல்வி பயிலும் முஸ்லிம்கள் 5 சதவீதம் மட்டுமே உள்ளனர்.
அங்கீகரிக்கப்படாத மதரஸாக்களில் பயிலும் மாணவர்களை, பள்ளிகளில் சேர்க்க நாங்கள் பரிந்துரைத்துள்ளோம். கேரளா போன்ற சில மாநிலங்கள் எதிர்த்தாலும், குஜராத் போன்ற மாநிலங்கள் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. குஜராத்தில் மட்டும் 50,000 குழந்தைகள் எதிர்ப்பை மீறி பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்த 10 ஆண்டுகளில், இந்த முஸ்லிம் குழந்தைகள் மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், வங்கியாளர்களாகவும் மாறுவார்கள். அதோடு, அவர்கள் எங்கள் முயற்சிகளை உறுதிப்படுத்துவார்கள்.” என்று தெரிவித்தார்.