கோவையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆய்வு செய்தார்.
கோவையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குகிறது. சாலைகளில் செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். தவிர, தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் மக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.
இந்த நிலையில், கோவையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று காலை ஆய்வு செய்தார். கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள கதிரவன் கார்டன் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம் மழை பாதிப்பு குறித்தும், அதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
அதே பகுதியில் மாநகராட்சி சார்பாக மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள சாலைகளில் மாநகராட்சி ஊழியர்கள் சரி செய்யும் பணியையும் அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டு உடனடியாக பணிகளை முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி, எம்பி-யான கணபதி ராஜ்குமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், திமுக மாவட்டச் செயலாளர்கள் நா.கார்த்திக், தொ.அ.ரவி, தளபதி முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.