வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தாம்பரம் மாநகராட்சி பகுதியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் அதிகாரிகளுடன் இன்று காலை ஆய்வு மேற்கொண்டனர். அனைத்து பகுதிகளிலும் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு உடனடியாக தண்ணீர் வடிவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
தாம்பரம் மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் அதிகாரிகளுடன் இன்று காலை நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து ஈசா பல்லாவரம் பகுதியில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிவாரண முகாம், இரும்புலியூர் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகள், தாம்பரம் – கிஷ்கிந்தா சாலையில் நடைபெற்று வரும் பணிகள் உள்ளிட்டவற்றையும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது: “மழையால் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான பிரட், பால் போன்ற அனைத்துப் பொருட்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவையான அளவு உணவுகள் சமைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் யார் தகவல் தெரிவித்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மோசமான பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்களை மீட்டு முகாமில் தங்கவைத்து அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
தண்ணீர் அதிகரித்தால் பொதுமக்களை மீட்டு செல்ல படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் மட்டுமல்லாமல் குன்றத்தூர், பூந்தமல்லி, மாங்காடு, ஆவடி போன்ற அனைத்துப் பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்கிறோம். என்னென்ன தேவையோ அவற்றை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனை செய்து வருகிறோம். கடந்த மழையின் போது ஏற்பட்ட பாதிப்புகளை தவிர்க்க நீர்வளத்துறை, நகராட்சி, ஊரக வளர்ச்சி சார்பில் மழை நீர் வாய்க்கால்கள் கட்டப்படுகிறது.
தாம்பரம் மாநகராட்சி சார்பில் அனைத்து பகுதிகளிலும் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு உடனடியாக தண்ணீர் வடிவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். நிரந்தரமாக செய்ய வேண்டிய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குட்வில் நகர் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் பணிகள் நடைபெற உள்ளது, விரைவில் அந்த பணிகள் நடைபெறும்.அனகாபுத்தூர் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.மழை பெய்யும் போது தார் சாலை சேதமடைவது எல்லாம் இடத்திலும் நடைபெறும் ஒன்றுதான். மழை நின்றவுடன் உடனடியாக சாலைகள் சரி செய்யப்படும். தற்காலிகமாக பேட்ச் பணிகளும் நடைபெற்று வருகிறது. மழை நின்றவுடன் முழுமையாக சாலையில் அமைக்கப்படும், என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார். இந்த ஆய்வுகளின் போது எம்எல்ஏ-க்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, நகராட்சி நிர்வாக துறை இயக்குநர் சிவராசு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் சீ.பாலசந்தர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதனிடையே மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளரும் தாம்பரம் மாநகராட்சியின் 59-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான எம்.யாகூப், தனது வார்டை வேண்டுமென்று மாநாகராட்சி நிர்வாகம் புறக்கணிக்கிறது. வார்டுகளில் எந்த கால்வாயும் தூர்வாரப்படவில்லை. எனவே, அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி வார்டில் தூர்வாரும் பணியும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சமூகவலைத் தளங்களில் அவர் வீடியோவும் பதிவிட்டு வருகிறார்.