விக்கிரவாண்டி மாநாடு தொடர்பாக விஜய் கட்சியிடம் காவல்துறை எழுப்பியுள்ள மேலும் 5 கேள்விகள் 

தவெக மாநாடு நடைபெறும் காலத்தில் வடகிழக்கு பருவமழையால் அதிகப்படியான மழை பொழிந்து வாகன நிறுத்துமிடங்களில் தண்ணீர் தேங்கி நிற்க வாய்ப்புள்ளது. அவ்வாறான சூழ்நிலையில் வாகனங்களை சிரமமின்றி நிறுத்திட செய்யப்படவுள்ள ஏற்பாடுகள் குறித்து விளக்கமாக தெரிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மேலும் 5 கேள்விகளை அக்கட்சியிடம் காவல்துறை எழுப்பியுள்ளது.

விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வரும் 27-ம் தேதி அன்று நடிகர் விஜய் கட்சியான தவெக மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்காக பந்தல் கால் நடப்பட்டு மாநாட்டுத் திடலை சமன்படுத்தி அப்பகுதியில் உள்ள 6 கிணறுகளுக்கு இரும்புத் தடுப்பு வேலி அமைக்கும் பணியும், மேடை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதனிடையே, மாநாட்டுப் பந்தலுக்காக இரும்பு பைப்புகளை ஏற்றி வந்த லாரி, மாநாட்டுத் திடலில் சேற்றில் சிக்கி நின்றது. பின்னர், அந்த லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர்.

மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு உணவு, குடிநீர் தடையின்றி கிடைக்கும் வகையில் தனியார் கார்பரேட் நிறுவனத்திடம் அதற்கான பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இரு பாலருக்கும் 250 கழிவறை வசதிகளை அமைப்பதுடன், வாகனங்கள் நிறுத்த சாலையின் இரு புறங்களிலும் 50 ஏக்கர் அளவில் இடவசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாநாட்டு மேடை அமைக்கும் பணி பிரத்யேகமாக சினிமாவுக்கு செட் அமைக்கும் ஆர்ட் டைரக்டர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு ஏற்பாடுகள் தொடர்பாக ஏற்கெனவே காவல் துறை தரப்பில் இருந்து 33 கேள்விகள் விஜய் கட்சியிடம் கேட்கப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்ற உறுதியுடன் மாநாட்டுக்கு காவல் துறை அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் மேலும் 5 கேள்விகளைக் கேட்டு விக்கிரவாண்டி டிஎஸ்பி-யான நந்தகுமார் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு நேற்று இரவு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ‘மாநாட்டில் சுமார் 1.5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்றும், சுமார் 50,000 நாற்காலிகள் போடப்படும் என்று தெரிவித்துள்ளீர்கள். மேலும் 1,50,000 நபர்கள் வரை மாநாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் ரசிகர்களும் பெருமளவில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தியே மாநாட்டுக்கு வர வாய்புள்ளதாகவும் தாங்களது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள்.

இம்மாநாட்டுக்கு மாநிலத்தின் தென்பகுதியில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு விழுப்புரம் – சென்னை சாலையின் இடதுபுறத்தில் 28 ஏக்கர் இடமும், கூடுதலாக சுமார் 15 ஏக்கர் இடத்தினையும் தாங்கள் தேர்வு செய்துள்ளதாக தெரியவருகிறது. வடதமிழகத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு சென்னை – விழுப்புரம் சாலையின் ஓரம் சுமார் 40 ஏக்கர் இடம் வாகன நிறுத்தமாக ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்திருந்தீர்கள்.

அனைத்து இடங்களிலும் வாகனங்கள் நிறுத்துவதற்கான திட்டம் வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாநாடு நடைபெறும் காலத்தில் வடகிழக்கு பருவமழையால் அதிகப்படியான மழை பொழிந்து வாகன நிறுத்துமிடங்களில் தண்ணீர் தேங்கி நிற்க வாய்ப்புள்ளது. அவ்வாறான சூழ்நிலையில் வாகனங்களை சிரமமின்றி நிறுத்திட செய்யப்படவுள்ள ஏற்பாடுகள் குறித்து விளக்கமாக தெரிவித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாநாட்டுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து மாவட்ட வாரியாக வரும் வாகனங்களின் (பேருந்து, வேன், கார்) விபரத்தினை வழங்கிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.