புதுச்சேரியில் அரசாணைப்படி கோயில்களிடம் நிலங்கள் உள்ளதா என ஆய்வு : ஆளுநர் தகவல்

புதுச்சேரியில் கடந்த 1974-ல் வெளியிடப்பட்ட அரசாணைப்படி கோயில்களிடம் நிலங்கள் உள்ளதா என்பதை ஆராய்ந்து வருவதாக துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்தார்.

புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறையின் அவசர கால உதவி மையத்தை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இன்று பார்வையிட்டார். அப்போது செயலர் நெடுஞ்செழியன், ஆட்சியர் குலோத்துங்கன் உள்ளிட்டோர் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கினர்.

அதைத்தொடர்ந்து துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”புதுச்சேரி, காரைக்காலில் கனமழை எச்சரிக்கையால் அதிகாரிகள் கூட்டம் நடந்தியுள்ளோம். தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பார்க்க இங்கு வந்தேன். அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையிலிருந்து தலா 30 நபர்கள் அடங்கிய மூன்று குழுக்கள் புதுச்சேரிக்கு வந்துள்ளன. இதில் இரண்டு குழுக்கள் புதுச்சேரிக்கும் ஒரு குழு காரைக்காலுக்கும் செல்கிறது.

பேரிடர் கால அவசர உதவி எண்கள் அவசர மையத்துக்கு செல்லாமல் காவல்துறைக்கு சொல்வது தொடர்பாக விசாரிக்கச் சொல்கிறேன். 108 ஆம்புலன்ஸ் எண்ணை தொடர்பு கொண்டால் தமிழகத்துக்கு செல்வதாகச் சொல்லப்படுவது தொடர்பாகவும் விசாரிக்கப்படும். மீனவர்கள் கிராமங்களுக்கு ஏற்கெனவே எச்சரிக்கை தந்துள்ளோம். செல்போன் மூலமாகவும் தகவல் தந்துள்ளோம். கடலுக்குச் சென்றிருந்த அனைவரும் கரை திரும்பி வருகின்றனர்.

மீனவ பஞ்சாயத்தாருக்கும் தெரிவித்துள்ளோம். டீசல் தருவதை இன்று முதல் நிறுத்தி வைத்துள்ளோம். 34 ஆயிரம் பேரின் செல்போனுக்கு தகவல் தந்துள்ளோம். கரை திரும்பியோர் குறித்தும் கணக்கெடுத்து வருகிறோம். அண்மையில் பெய்த மழையில் நகரப்பகுதியில் தண்ணீர் தேங்கியது தொடர்பாக கேட்கிறீர்கள். முன்பே தூர்வார ஆரம்பித்துவிட்டனர். பெரிய வாய்க்காலில் பணிகள் நடக்கிறது. அதுதான் இதில் முக்கியமானது. அதன் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கொம்யூன் பஞ்சாயத்துகளில் மோட்டார்கள் போதியளவில் இல்லை என்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தண்ணீரை சீராக விநியோகிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். காரைக்கால் கோயில் நிலமோசடி தொடர்பான வழக்கில் போலீஸ் விசாரணை நடக்கிறது. இதில் நடவடிக்கையானது அரசியல்வாதிகள், அதிகாரிகள் என்றில்லாமல் யார் யாருக்கெல்லாம் இதில் தொடர்பு இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்.

இது தொடர்பான விசாரணைப் பொறுப்பை செயலர் நெடுஞ்செழியன் ஏற்றுள்ளார். கடந்த 1974-ல் போடப்பட்டுள்ள அரசாணையில் இருப்பது போல் கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் சம்பந்தப்பட்ட கோயில்களிடம் இருக்கிறதா என்பதை ஆய்வு வருகிறோம். கோயில் விஷயத்தில் முதலில் கவனம் செலுத்துகிறோம்” என்று ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்தார்.