மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர்கள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்தின் 10-வது நாளான இன்று, அவர்கள் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்றனர்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர், கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி பணியில் இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இதற்கு நீதி கேட்டு அந்தக் கல்லூரியின் பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அவர்கள் மேற்கொண்டு வரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று 10-வது நாளை எட்டியுள்ளது. உண்ணாவிரதம் இருந்து வரும் மருத்துவர்களில் ஏற்கெனவே 3 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று 4-வது மருத்துவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பயிற்சி மருத்துவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக ஆர்.ஜி கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 50 மூத்த மருத்துவர்கள் கடந்த 8-ம் தேதி ராஜினாமா செய்தனர். அவர்களும் பயிற்சி மருத்துவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களில் பலர் உடல்நிலை சரியில்லாமல் உள்ளனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தின் 10-வது நாளை முன்னிட்டு, மருத்துவர்கள் இன்று பேரணியாக ஆளுநர் மாளிகை நோக்கிச் சென்றனர். மாநில சுகாதார செயலாளரை மாற்ற வேண்டும், மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு போதிய வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளனர்.
இதனிடையே, மேற்கு வங்க அரசு கொல்கத்தாவில் பிரம்மாண்டமான துர்கா பூஜை திருவிழாவை நாளை நடத்த தயாராகி வருகிறது. குடியரசு தின கொண்டாட்டங்களைப் போலவே துர்கா பூஜை கொண்டாட்டங்கள் நடப்பது வழக்கம். அதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. நாளைய தினம் பயிற்சி மருத்துவர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். எனினும், திருவிழாவின்போது எந்த விதமான ஆர்ப்பாட்டமும் நடத்தக் கூடாது என்று கல்கத்தா உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், பல்வேறு மருத்துவர் சங்கங்களுடன் மேற்கு வங்க தலைமைச் செயலாளர் மனோஜ் பந்த் இன்று ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்று, நாங்கள் பல்வேறு மருத்துவர்கள் சங்கங்களை அழைத்திருந்தோம். அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகளும் வருகை தந்தனர். பல்வேறு பிரச்சினைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். 10 கோரிக்கைகளில் ஏழு கோரிக்கைகளை ஏற்பதாக நாங்கள் தெளிவாகக் கூறினோம். மீதமுள்ள மூன்று கோரிக்கைகளுக்கு அவர்கள் ஒரு காலக்கெடு நிர்ணயிக்குமாறு அவர்கள் கோரினர். ஆனால், அரசாங்கத்தால் காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாது என்றும், எதிர்காலத்தில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப இந்த பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் நாங்கள் அவர்களிடம் கூறினோம்” என குறிப்பிட்டார்.