பழங்கரை ஊராட்சியை திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்புக் கொடி கட்டி அனைத்துக் கட்சியினர் சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
திருப்பூர் மாநகராட்சியை ஒட்டியுள்ள பல்வேறு ஊராட்சிகளை, திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு பகுதி பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவிநாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட பழங்கரை ஊராட்சியை, திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று ஊராட்சி முழுவதும் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அனைத்துக் கட்சியினர் அறிவித்திருந்தனர்.
அதன்படி, பழங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீடுகளிலும் இன்று கருப்புக் கொடி கட்டப்பட்டது. மேலும், வணிக வளாகங்கள், தேநீர் கடைகள், பனியன் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றிலும் கருப்புக் கொடிகளை கட்டி அவற்றை அடைத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.