கும்பகோணம் அருகே கல்லூரிப் பேருந்து – மினி லாரி மோதல் : இருவர் உயிரிழப்பு, 20 மாணவர்கள் காயம்

கும்பகோணம் அருகே கோவிந்தபுரத்தில் தனியார் கல்லூரிப் பேருந்தும் மினி லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் அதே இடத்தில் உயிரிழந்தனர். கல்லூரி மாணவ – மாணவியர் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, கோவிந்தபுரம் வழியாக கும்பகோணம் அடுத்த கள்ளப்புலியூரில் இயங்கும் தனியார் கல்லூரி பேருந்து மாணவ – மாணவியரை ஏற்றிக்கொண்டு கும்பகோணம் நோக்கி இன்று காலை சுமார் 8.30 மணியளவில் வந்து கொண்டிருந்தது.

அப்போது கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு பூ ஏற்றிச் சென்ற ஒரு மினி லாரி எதிரே வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பேருந்தும் மினி லாரியும் பயங்கர வேகத்தில் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பேருந்தின் முன் பக்கத்தின் அடிப்பகுதியில் மினி லாரி சிக்கிக்கொண்டது.

பேருந்துக்குள் சிக்கிக்கொண்ட மினி லாரியை இரண்டு பொக்லைன்கள் மூலமாக மீட்டு வெளியே எடுத்தனர். இந்த விபத்தில், மினி லாரியில் பயணம் செய்த கும்பகோணம் மூப்பக்கோவில் மேலத்தெருவை சேர்ந்த முகமது ரபீக் மகன் முகமது சமீர் (25) மற்றும் சுந்தரபெருமாள் கோவில், மேல வீதியைச் சேர்ந்த மணி மகன் கார்த்தி (31) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையடுத்து அவர்களது உடல்களை மீட்ட திருவிடைமருதூர் போலீஸார், கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கல்லூரி பேருந்தில் பயணம் செய்த 20 மாணவ – மாணவியரும் இந்த விபத்தில் லேசான காயமுற்றனர். அவர்கள் அனைவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து திருவிடைமருதூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.