மகாராஷ்டிரா பல்கலைக்கழகத்துக்கு ரத்தன் டாடா பெயர் – மாநில அரசு அறிவிப்பு

மகாராஷ்டிர மாநில திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகத்தின் பெயரை “ரத்தன் டாடா மகாராஷ்டிர மாநில திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகம்” என மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது.

வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, கடந்த 9-ம் தேதி காலமானார். அவரது மறைவை அடுத்து 10ம் தேதி துக்க தினமாக மாநில அரசால் அனுஷ்டிக்கப்பட்டது. மேலும், அரசு மரியாதையுடன் ரத்தன் டாடாவின் உடல் கடந்த 10ம் தேதி தகனம் செய்யப்பட்டது.

அன்றைய தினம் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ரத்தன் டாடாவுக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்க மத்திய அரசுக்கு முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அமைச்சரவைக் கூட்டத்தில் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, ரத்தன் டாடாவின் சமூக பங்களிப்பை கவுரவிக்கும் நோக்கில், மகாராஷ்டிர மாநில திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகத்தின் பெயரை “ரத்தன் டாடா மகாராஷ்டிர மாநில திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகம்” என மாற்ற முடிவு செய்யப்பட்டிருப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது.