புதுக்கோட்டை ரோஸ் மற்றும் ஆர்.எல்.ஹச்.பி மற்றும் தமிழ்நாடு சூழலியல் இளையோர் அமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த, பேரிடர் அபாயக் குறைப்புக்கான சர்வதேச தினத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தின் அரிமளம், பொன்னமராவதி, குண்ணன்டார்கோவில், மணமேல்குடி ஒன்றியங்களில் உள்ள 20 கிராமங்களில் 2000 பனைவிதைகள் நடவுசெய்யப்பட்டன.
ஐக்கிய நாடுகள் சபையானது, ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 13 ஐ, பேரிடர் அபாயக் குறைப்புக்கான சர்வதேச தினமாக கொண்டாடி வருகிறது. இந்த வருட கருப்பொருளாக, “எதிர்கால சந்ததிகளாகிய குழந்தைகளுக்கும் இளைய தலைமுறைக்கும், பேரிடர் அபாயத்தை குறைப்பதற்கான கல்வியறிவையும், திறனையும் கொடுத்தல் வேண்டும்” என்று கூறியுள்ளது. பல பேரழிவுகள், பெரும்பாலும் காலநிலை மாற்றத்தால் மிகவும் மோசமடைகின்றன, காலநிலை பாதிப்புகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பேரழிவுகள் காரணமாக உலகளவில் சுமார் ஒரு பில்லியன் குழந்தைகள் மிக அதிக ஆபத்தில் இருப்பதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
பேரழிவுகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க, பேரிடர் அபாயத்தைக் குறைக்கும் உள்ளூர் அளவிலான யுக்திகளை உருவாக்க வேண்டும். 2015-2030 பேரிடர் அபாயக் குறைப்புக்கான செண்டாய் கட்டமைப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் பேரிடர் அபாயத்தைக் குறைப்பதில் பங்களிப்பதற்கான வாய்ப்பை அவர்களுக்கு சமமாக வழங்குவது முக்கியமானது. குறிப்பாக கல்வியின் மூலம் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்பது, அவர்கள் கற்றுக்கொண்டதைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகங்களில் மாற்றத்தின் முகவர்களாக மாறவும் முடியும். இதன் ஒரு பகுதியாக, பருவநிலை மாற்றத்தைத் தணிப்பதிலும், பல்லுயிர்ப் பாதுகாப்பிலும், சுற்றுச்சூழலை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றி கொண்டிருக்கும் பனைமரங்களை பாதுகாக்கும் நோக்கில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பனைவிதைகள் நடவுசெய்யப்பட்டன.
பனை மரங்கள் அவை வாழும் சுற்றுச்சூழல் அமைப்புகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன, எண்ணற்ற தாவர மற்றும் விலங்கு இனங்களுக்கு வாழ்விடம், உணவு மற்றும் தங்குமிடம் வழங்குகின்றன. அவற்றின் ஆழமான வேர் அமைப்புகள் மண்ணை உறுதிப்படுத்தவும், மண்அரிப்பைத் தடுக்கவும், நீர்நிலைகளை பராமரிக்கவும் உதவுகின்றன, அதே நேரத்தில் அவற்றின் பழங்கள், இலைகள் மற்றும் கொட்டைகள் பல்வேறு வனவிலங்குகளுக்கு உணவாகிறது. மற்றும் நம் சுற்றுச்சூழல் மீள்தன்மைக்கும் பங்களிக்கின்றன. கடற்கரையோரங்களில், மணல் திட்டுகளை நிலைநிறுத்துவதற்கும், கடலோர அரிப்பைத் தடுப்பதற்கும், புயல் அலைகள் மற்றும் சூறாவளிகளிலிருந்து பாதுகாப்பதற்கும் பனை மரங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. பேரிடர் அபாயக் குறைப்புக்கான சர்வதேச தினம் 2024 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, 2000 பனை விதைகள் நடவு செய்தும், பஞ்சகவ்யம் போன்ற இயற்கை இடுபொருட்கள் தயார் செய்தும், தங்களின் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் யுக்திகளை வெளிப்படுத்தினர்.
இளையோர் அமைப்பின் தலைவர் சத்யா கூறுகையில், எங்கள் அமைப்பின் மூலம் பனை விதை நடும் நிகழ்வை தொடர்ந்து எடுத்துச்சென்று 50000 பனைவிதைகள் நடுவது என்றும், கிராம பல்லுயிர்சூழல் பதிவேடு பராமரிப்பதன் மூலம், நம் கிராமங்களில் தற்போது இருக்ககூடிய மற்றும் அழிந்து வரக்கூடிய மற்றும் அழிந்து போன மரங்கள், செடிகள், மூலிகைகள், பறவைகள், பூச்சி இனங்கள், மீன்இனங்கள், நீர்வாழ்உயிரினங்கள், அலையாத்தி காடுகள், உணவுப்பழக்கவழக்கங்கள் போன்ற பல்வேறு தகவல்களை நம் இளைய தலைமுறைக்கும் குழந்தைகளுக்கும் கொண்டு செல்ல முடியும் என்றும், பல்லுயிர்சூழல் பதிவேடு பராமரிப்பை, தற்போது எங்களது அமைப்பு முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். இதில் இளையோர் அமைப்பினைச் சார்ந்த கீர்த்தனா, அலமேலு, காவியா, பெஸ்டின், பத்மினி, செல்வி, பாலாஜி, மற்றும் நிறுவன பணியாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.