சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அக்.15ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், நாளை (அக்.15ம் தேதி) முதல் அக்.18ம் தேதி வரை தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தலாம் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
இன்று (14.10.2024) தலைமைச் செயலகத்தில், 15.10.2024 முதல் 17.10.2024 வரை சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்ற வானிலை மைய எச்சரிக்கையைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்.14) நடைபெற்றது. கூட்டத்தில், மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், காவல்துறை டிஜிபி, சுகாதாரத்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை உயர் அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். துறைச் செயலாளர்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விரிவாக ஆய்வு செய்தார்.
மழைநீர் வடிகால் பணிகள், தூர்வாரும் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, நாளை (அக்.15-ம் தேதி) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். அக்.15-ம் தேதி முதல் அக்.18ம் தேதி வரை தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.