கலைஞர் பூங்காவில் ஜிப்லைன் பழுது – ரோப் காரில் அந்தரத்தில் தொங்கி அலறிய பெண்கள் : உரிய பாதுகாப்பு வழங்க இபிஎஸ் வலியுறுத்தல்

கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ஏற்பட்ட ஜிப்லைன் பழுது காரண மாக, ரோப் காரில் பயணித்து கொண்டிருந்த 2 பெண்கள் அந்தரத்தில் தொங்கியவாறு அலறி கூச்சலிட்டனர்.

சென்னை கதீட்ரல் சாலையில் 6.9 ஏக்கர் நிலப்பரப்பில் உலக தரத்துடன் நவீன அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு பூங்கா ரூ.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. இதில் மக்களை கவரும் வகையில் உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், இசை நீரூற்று, 500 மீட்டர் நீளமுடைய ஜிப்லைன் ரோப் கார், கலைக்கூடம், கண்ணாடி மாளிகை போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 7-ம் தேதி திறந்து வைத்தார்.

இந்நிலையில் ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறையொட்டி நேற்று ஏராளமான மக்கள் பூங்காவுக்கு வருகை தந்திருந்தனர். அப்போது அங்குள்ள பிரபல ஜிப்லைன் ரோப் காரில் பொதுமக்கள் உற்சாகத்துடன் பயணித்து கொண்டிருந்தனர். அப்போது ஜிப்லைனில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு ரோப் கார் பழுதடைந்து பாதி வழியில் நின்றது. இதனால் அதில் பயணித்து கொண்டிருந்த பெண்கள் இருவரும் அதிர்ச்சி யடைந்து அலறி கூச்சலிட்டனர்.

தொடர்ந்து அந்தரத்தில் 20 நிமிடங்களுக்கு மேலாக தொங்கியவர்கள் அழவும் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. அங்கு கூடியிருந்த சுற்றுலா பயணிகள் ஒன்றாக கோஷமிட்டு பெண்களை உடனடியாக மீட்குமாறு வலியுறுத்தினர். இதற்கிடையே நீண்டநேரமாக ஜிப்லைன் இயங்க வைக்க முயன்றுகொண்டிருந்த ஊழியர்கள், அது முடியாததால் பின்னர் கயிறு மூலமாக ரோப் காரை கட்டி இழுத்தனர்.

இதையடுத்து அந்தரத்தில் தொங்கிய பெண்களை பத்திரமாக மீட்டு கீழே கொண்டுவந்தனர். விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வந்த பெண்கள், உயிர் பயத்தில் அலறி துடித்தது அங்கிருந்த வர்களிடயே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து ரோப் காரில் எதனால் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இச்சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, “அரசு பூங்கா புதிதாக திறக்கப்பட்டுள்ளது என்பதை நம்பி வரும் மக்களின் உயிரோடு பாதுகாப்பற்ற உபகரணங்களை கொண்டு திமுக அரசு விளையாடுவது கண்டனத்துக்குரியது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரிலான இந்த பூங்காவுக்கு நுழையவே ரூ.100 கட்ட வேண்டும். இதுதவிர ஒவ்வொரு வசதிக்கும் தனி கட்டணம்.

இவ்வாறு தனியார் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு இணையாக கட்டணம் வசூலிக்கும் திமுக, பூங்காவுக்கு வருகை தரும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதையும் உறுதி செய்ய வேண்டும்” என்று இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.