புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட சாந்தாரம்மன் கோவில், பல்லவன் குளம் மற்றும் பூ மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில், வடகிழக்கு பருவமழையின் காரணமாக, மழைநீர் தேங்கி நின்ற இடங்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இன்று மழைநீரில் நடந்தே சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள். அந்த வகையில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் பொதுமக்களுக்கு எவ்வித சிரமமின்றி உடனடியாக மழைநீர் அகற்றப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், சென்னை வானிலை மையம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு 3, 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று அறிவித்திருந்த நிலையில் நேற்று இரவு ஒருமணி நேரத்திற்கு மேலாக புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு ராஜவீதி, திலகர்திடல், அடப்பன்வயல், சாந்தாரம்மன் கோவில், பூ மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், புதுக்கோட்டை பல்லவன் குளம் மழைநீரால் நிரம்பி வழிந்தோடி சென்று, பூ மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியிருந்த நிலையில், புதுக்கோட்டை மாநகராட்சியின் சார்பில் பல்லவன் குளத்தில் உள்ள மழை நீரை ராட்சத வாகனம் மூலம் வெளியேற்றும் பணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பல்லவன் குளம் நிரம்பி அதில் உள்ள தண்ணீர் செல்லும் வரத்து வாய்க்கால் மற்றும் மன்னர் காலங்களில் முறையாக பராமரிக்கப்பட்டிருந்த வரத்து வாய்க்கால்களில், தற்பொழுது ஆக்கிரமிப்புகள் மற்றும் அடைப்புகள் இருந்தால் அவற்றை உடனடியாக அகற்றி, மழைநீர் சீராக செல்லும் வகையில் பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பூ மார்க்கெட் பகுதியில் தேங்கியிருந்த மழைநீரில் நடந்து சென்று அனைத்து இடங்களையும் பார்வையிட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றி, அடைப்புகளை சரிசெய்து மழைநீர் செல்வதற்கான வழியினை உடனடியாக ஏற்படுத்திடவும், இப்பணிகள் மழைக்காலங்களில் மட்டுமின்றி நிரந்தர தீர்வாக அமைவதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பேரிடர் காலங்களில், மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணிநேரமும் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறையின் 04322 222207 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளின் போது மேயர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையர் த.நாராயணன், வட்டாட்சியர் பரணி, மாமன்ற உறுப்பினர் (16-வது வார்டு) சேட், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.