கரூரில் பாப்பயம்பாடி குளம் உடைந்து வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், பாலப்பட்டி தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளநீர் வழிந்தோடுகிறது.
கரூர் மாவட்டத்தில் மாயனூர், கிருஷ்ணராயபுரம், பஞ்சப்பட்டி, பாலவிடுதி, மைலம்பட்டி, கரூர், குளித்தலை, க.பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக நேற்று மழை பெய்தது. இன்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு மி.மீட்டரில்.மாயனூர் 72, கிருஷ்ணராயபுரம் 71, பஞ்சப்பட்டி 58, க.பரமத்தி 49.80, குளித்தலை 44, கரூர் 43, பாலவிடுதி 38, மைலம்பட்டி 29, அணைப்பாளையம் 23, அரவக்குறிச்சி 17, கடவூர் 16.60, தோகைமலை 11.40 என மொத்தம் 473.20 மி.மீட்டரும் சராசரியாக 39.43 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
கரூர் மாவட்டடம் குளித்தலை அருகேயுள்ள பாப்பையம்பாடி பகுதியில் தொடர்மழை காரணமாக அங்குள்ள குளம் நேற்றிரவு நிரம்பியது. இதனால் குளம் உடைந்து தண்ணீர் வெளியே ஊருக்குள் புகுந்தது சுமார் 10க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. தொடர்ந்து வெள்ள நீர் வெளியேறி வந்தது. அவ்வீடுகளில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் வீட்டு முன்பு கட்டி வைத்திருந்த கோழிகள், ஆட்டுக்குட்டிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
தொடர் கனமழை காரணமாக புங்காற்று காட்டுவாரியில் பாலப்பட்டி தரைப்பாலத்தின் மீது 2 முதல் 3 அடி உயரத்திற்கு வெள்ள நீர் செல்கிறது. இதனால் வேங்காம்பட்டி, லாலாபேட்டை சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் வெள்ள நீர் அதிகளவில் செல்லும் நிலையில் ஆபத்தை உணராமல் இரு சக்கர வாகன ஓட்டிகள், 4 சக்கர வாகன ஓட்டிகள் அதில் பயணம் செய்தனர். கண்ணமுத்தாம்பட்டி குளமும் மழை நீரால் நிரம்பி உபரிநீர் வழிந்து வெளியேறி வருகிறது.