தூத்துக்குடி மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நேற்று கோவில் கடற்கரையில் நடைபெற்றது. பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் காளி ஜெய் காளி என்ற கோசத்துடன் அம்மனை வழிபட்டனர்.
உலக புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூர்க்கு அடுத்ததாக குலசேகரன்பட்டினத்தில் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். நவராத்திரியை முன்னீட்டு நடைபெறும் தசரா திருவிழா இந்தாண்டு கடந்த 03-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும் தசரா திருவிழாவில் தினமும் இரவு அம்மன் துர்க்கை அம்மன், நவநீதகிருஷ்ணர் மற்றும் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பல்வேறு அவதாரக்கோலங்களில் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் மகிஷா சூரசம்ஹாரம் நேற்று நள்ளிரவு கோவில் கடற்கரையில் நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்திலிருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் 41 நாட்கள், 21 நாட்கள் என வேண்டுதலுக்கிணங்க மாலை அணிந்து விரதமிருந்த பக்தர்கள் காப்பு கட்டி காளி, அம்மன், ராஜா, ராணி, குறவன், குறத்தி, உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து தனித்தனியாகவும், குழுக்களாகவும் வீடு, வீடாக சென்று பெற்ற காணிக்கையை கோவில் உண்டியலில் செலுத்தி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
மகிஷா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் மஹிஷா சூரமர்தினி அவதாரக்கோலத்தில் எழுந்தருளி கடற்கரை வந்தார். முதலில் தன் முகத்துடன் இருந்த மஹிஷாசூரனை அம்மன் வதம் செய்தார். பின்னர் சிங்கமுகமாக உருவம் பெற்றவனையும் வதன் செய்தார். தொடர்ந்து எருமை முகம் பெற்ற சூயனையும், முடிவில் சேவல் உருவமாக மாறிய மஹிசாசூரனையும் வதம் செய்தார். இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஓம் காளி, ஜெய் காளி என்ற கோஷத்துடன் அம்மனை வழிபட்டனர். கோவில் கடற்கரையில் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தது. இதற்காக 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் 50 இடங்களில் 250 கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து வந்தனர். பக்தர்கள் வசதிக்காக சுமார் சிறப்பு 200 பேருந்துகள் இயக்கப்பட்டது.