அரசியல் ஆதாயங்களுக்காக காங்கிரஸ் கட்சி இந்துக்களை பிரிக்க முயல்வதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்டிராவில் ரூ.7,600 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது. இதில், டெல்லியில் இருந்தவாறு காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு பிரதமர் மோடி திட்டங்களை தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மகாராஷ்டிராவுக்கு 10 மருத்துவக் கல்லூரிகள் வழங்கப்படுகின்றன. மேலும், நாக்பூர் மற்றும் ஷீரடி விமான நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டு விரிவாக்கப்பட உள்ளன. மகாராஷ்டிரா வரலாறு காணாத வேகத்தில் வளர்ந்து வருகிறது. மகாராஷ்டிராவின் வரலாற்றில் இதற்கு முன் இவ்வளவு வேகமாகவும், பெரிய அளவிலும் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் நடந்ததில்லை.
சமீபத்தில், மராத்தி மொழிக்கு ‘செம்மொழி’ அந்தஸ்து வழங்கப்பட்டது. இது மராத்தி கலாச்சாரத்தை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் உதவும். கோடிக்கணக்கான மராத்தி மக்களின் பல ஆண்டு கால கனவு நனவாகியுள்ளது. இதற்காக, மகாராஷ்டிரா மக்கள் தளங்களில் எனக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்த பணி என்னால் அல்ல, உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்தால் முடிந்தது.
ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகின. நாட்டின் மனநிலை என்ன என்பதை ஹரியானா காட்டியுள்ளது. இரண்டு ஆட்சிக் காலத்தை முடித்துவிட்டு தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது வரலாற்று சிறப்புமிக்கது. மூன்றாவது பதவிக்காலத்தை எங்களுக்கு ஆசீர்வதித்ததன் மூலம் ஹரியானா, நாட்டின் மனநிலையை பிரதிபலித்துள்ளது.
காங்கிரஸின் நகர்ப்புற நக்சலைட்டுகள், பொய்ப் பிரச்சாரத்தை மக்களிடையே பரப்புவதில் மும்முரமாக இருந்தனர். ஆனால் காங்கிரஸின் சதிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுவிட்டன. தலித்துகள் மத்தியில் பொய்களைப் பரப்ப காங்கிரஸ் முயன்றது. ஆனால் தலித் சமூகம் அவர்களின் ஆபத்தான நோக்கத்தை உணர்ந்து கொண்டது. தங்கள் இடஒதுக்கீட்டைப் பறிப்பதன் மூலம் காங்கிரஸ் தனது வாக்கு வங்கியைப் பிரிக்க விரும்புவதை தலித்துகள் உணர்ந்தனர்.
முஸ்லிம்கள் மனதில் அச்ச உணர்வை காங்கிரஸ் உருவாக்கி வருகிறது. அவர்களிடம் அச்சத்தை காங்கிரஸ் திணிக்கிறது. தங்கள் வாக்கு வங்கிக்காக, காங்கிரஸ் நாட்டை வகுப்புவாதமாக்குகிறது. ஹரியானாவின் இதர பிற்படுத்தப்பட்ட மக்களும் பாஜகவின் வளர்ச்சிப் பணிகளைப் பார்த்து, அவர்களும் பாஜகவோடு இருக்கிறார்கள். காங்கிரஸ் விவசாயிகளை தூண்டி விட்டது. ஆனால், பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை யார் கொடுத்தார்கள் என்பது விவசாயிகளுக்குத் தெரியும். பாஜகவின் விவசாயிகள் நலத் திட்டங்களால் ஹரியானா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காங்கிரஸ் இளைஞர்களை குறிவைத்து பல்வேறு வழிகளில் தூண்டிவிட முயன்றது. ஆனால் ஹரியானா இளைஞர்களும், நமது சகோதரிகளும், மகள்களும் தங்கள் பிரகாசமான எதிர்காலத்திற்கு பாஜகவை மட்டுமே நம்புகிறார்கள். மக்களை பிரித்து ஆட்சியைப் பெறுவது என்ற ஃபார்முலாவை காங்கிரஸ் எப்போதும் கடைப்பிடித்து வருகிறது. காங்கிரஸ் பொறுப்பற்ற கட்சி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது. நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு அவர்கள் பல புதிய கதைகளை உருவாக்குகிறார்கள். சமூகத்தை பிளவுபடுத்துவதற்கான சூத்திரத்தை காங்கிரஸ் தொடர்ந்து செய்து வருகிறது.
ஒவ்வொரு நாளும், மக்கள் மனதில் வெறுப்பு விதைகளை விதைக்கிறார்கள். சுதந்திரத்திற்குப் பிறகு, மகாத்மா காந்தி காங்கிரஸின் கீழ்த்தரமான நோக்கங்களை உணர்ந்தார், அதனால்தான் அவர் கட்சியை கலைக்க விரும்பினார்.
இந்துக்களில் ஒரு சாதியை இன்னொரு சாதிக்கு எதிராகப் போராட வைப்பதுதான் காங்கிரஸின் கொள்கை. இந்துக்கள் எந்த அளவுக்குப் பிரிகிறார்களோ, அந்த அளவுக்குப் பலன் கிடைக்கும் என்பது காங்கிரசுக்குத் தெரியும். எல்லா வகையிலும் இந்து சமுதாயம் தீ பற்றி எரிய வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. ஏனெனில், அதன் மூலம் அரசியல் லாபம் ஈட்ட அக்கட்சி எண்ணுகிறது. இந்தியாவில் எங்கு தேர்தல் நடந்தாலும் காங்கிரஸ் இதே ஃபார்முலாவைத்தான் கடைப்பிடிக்கிறது. காங்கிரஸ் முழுக்க முழுக்க வகுப்புவாத மற்றும் சாதிய அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் அரசியலின் அடிப்படையே இந்து சமுதாயத்தை உடைத்து, அதனை தனது வெற்றிக்கான சூத்திரமாக மாற்றுவதுதான்.
அனைவர் மீதும் அன்பு; அனைவருக்கும் நலன் எனும் இந்தியாவின் பாரம்பரியத்தை காங்கிரஸ் நசுக்குகிறது. ஒரு நாட்டின் இளைஞர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்கும்போதுதான் உலகம் அந்த நாட்டை நம்புகிறது. இளம் இந்தியாவின் தன்னம்பிக்கையில்தான், இந்தியாவின் எதிர்காலம் இருக்கிறது. உலகின் பெரிய நாடுகள் இன்று இந்தியாவை மனித வளத்தின் முக்கிய மையமாக பார்க்கின்றன. காங்கிரஸுக்கு வளர்ச்சியின் மீதும், பாரம்பரியத்தின் மீதும் அக்கறை இல்லை. நமது அரசாங்கத்தில் வளர்ச்சியும் பாரம்பரிய மரபும் உள்ளது. நமது வளமான கடந்த காலத்திலிருந்து உத்வேகம் பெற்று, ஒளிமயமான எதிர்காலத்தை நாம் உருவாக்கி வருகிறோம்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.