புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், மாமன்ற முதல் கூட்டத்தினை, குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ஆகியோர், மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் இன்று துவக்கி வைத்து, பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, மேயர் திலகவதி செந்தில்-க்கு வெள்ளி செங்கோலினை வழங்கினார்கள்.
பின்னர் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்கள் நல்வாழ்வு வாழ்ந்திட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், பொதுமக்களுக்கு தேவையான, குடிநீர் வசதி, மின்வசதி, சாலை வசதி, பேருந்து வசதி, சுகாதார வசதி உள்ளிட்டவைகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய தினம், புதுக்கோட்டை மாநகராட்சி மாமன்ற முதல் கூட்டத்தினை துவக்கி வைத்து, ரூ.145.55 கோடி மதிப்பீட்டில் புதிய பாதாள புதை வடிகால், புதை வடிகால் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், புதிய குடிநீர் திட்டம் மற்றும் புதிய பேருந்து நிலைய கட்டிடப் பணிகள் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கப்பட்டது.
அந்த வகையில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.18.90 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கட்டப்படவுள்ள புதிய பேருந்து நிலைய கட்டிட பணியினையும் மற்றும் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.101.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள பாதாள சாக்கடை அமைக்கும் திட்டப் பணியினையும் மற்றும் ரூ.25.31 கோடி மதிப்பீட்டில் 24 ஓ 7 மணிநேரம் குடிநீர் வழங்கும் திட்டப் பணியினையும் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கப்பட்டது.
இதில், பாதாள சாக்கடை அமைக்கும் திட்டமானது, 1, 2, 3, 4, 40, 41, 42 ஆகிய 7 வார்டுகளில் அமைக்கப்படுகிறது. மேலும் 8,101 வீட்டு இணைப்புகளுக்கும் இத்திட்டம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் 30,500 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைவார்கள். மேலும், குடிநீர் வழங்கும் திட்டத்தின் மூலம் 24 மணி நேரமும் வாரத்தின் 7 நாட்களும் தங்கு தடையின்றி குடிநீர் வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் 38, 39, 40, 41, 42 ஆகிய 5 வார்டுகளில் அமைக்கப்படுகிறது. இதில் 3,850 குடிநீர் இணைப்புகள் புதிதாக வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் 22,000 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைவார்கள். இப்பணிகள் அனைத்தையும் தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இத்தகைய சிறப்புமிக்க திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் மீது மிகுந்த அக்கறைகொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய தினம், மாமன்ற முதல் கூட்டத்தினை துவக்கி வைத்து, ரூ.145.55 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
அந்த வகையில், புதிய பேருந்து நிலையம் கட்டுவதன் மூலம் பொதுமக்களுக்கு இடையூறின்றி பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் சென்றுவர முடியும். மேலும், பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் கழிவு நீர் கால்வாய்களில் வழிந்தோடி சாலைகளில் கழிவு நீர் தேங்காமல் இருக்கும். குடிநீர் வழங்கும் திட்டம் பயன்பாட்டிற்கு வரும்பட்சத்தில் அப்பகுதி பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் சீரான குடிநீர் வழங்கப்படும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்.
எனவே, பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி வரும் தமிழக அரசின் திட்டங்களை தொடர்புடைய அரசு அலுவலர்கள் உரிய முறையில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில், சட்டமன்ற உறுப்பினர்கள் வை.முத்துராஜா (புதுக்கோட்டை), எம்.சின்னத்துரை (கந்தர்வக்கோட்டை), முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் தானமூர்த்தி, புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர் எம்.லியாகத் அலி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி தமிழ்செல்வன், புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையர் த.நாராயணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் இராசு.கவிதைப்பித்தன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் க.முகமது இப்ராஹிம், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) காளியப்பன், அறங்காவலர் குழுத் தலைவர் தவ.பாஞ்சாலன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் த.சந்திரசேகரன், தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் பெ.தெய்வானை, அனைத்து மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.