“தேவைக்கு மிஞ்சியதை மற்றவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும்” – ஐகோர்ட் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி

“வருமானத்தில் தேவைக்கு போக மீதியிருப்பதை மற்றவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும்,” என உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

என்ஜிஓ ஹெல்ப் பவுண்டேஷன் சார்பில் மதுரையில் என்ஜிஓ – சிஎஸ்ஆர் சந்திப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கி உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பேசியதாவது: தொண்டு மற்றும் உதவி செய்வது குறித்து 2 ஆயிரம் ஆண்டுக்கு முன்பே திருவள்ளுவர் எழுதியுள்ளார். அவரவர் வருமானத்தில் தேவை போக மீதமுள்ள பணத்தை மற்றவர்களுக்கு கொடுத்து உதவி செய்ய வேண்டும்.

முற்காலத்தில் தொண்டு, உதவி செய்தவர்களுக்கு சமூகத்தில் அதிக மரியாதை இருந்தது. உதவி என்பது நம்மிடம் இருப்பதை அனைவருக்கும் கொடுப்பதல்ல இல்லாதவர்களுக்கு கொடுப்பதுதான் உதவி. வறுமை, கல்வி, சுகாதாரம், விளையாட்டு, ஆராய்ச்சி போன்ற பல்வேறு வகையில் உதவிகள் செய்யப்படுகிறது.

இந்த தொண்டு மற்றும் உதவிகள் தொடர வேண்டும்,” என்று நீதிபதி பேசினார். இந்த நிகழ்வில் அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தமிழக தலைவர் கு.சாமிதுரை, செல்லமுத்து அறக்கட்டளை டாக்டர் சி.ராமசுப்பிரமணியன், சமூக அறிவியல் கல்லூரி செயலாளர் தர்மசிங் உட்பட பலருக்கு இந்த நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்பட்டன. தொண்டு நிறுவவனங்கள், என்ஜிஓ அமைப்பினர் பங்கேற்றனர்.