தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கடலூர் மாவட்டத்தில் கடலூர், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோயில், பரங்கிப்பேட்டை புவனகிரி, சிதம்பரம் உள்ளிட்ட 18 இடங்களில் இன்று காலை அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும் வடக்கு மாவட்ட செயலாளருமான எம்சி.சம்பத் தலைமை தாங்கினார். நிர்வாகி சேவல் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வடலூரில் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் சொளத்தூர் ராஜேந்திரன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான கலந்து கொண்டனர்.
சிதம்பரம் மேல வீதியில் அதிமுக சார்பில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கேஏ.பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் குமார், நகர செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் தோப்பு சுந்தர், முன்னாள் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர் திருமாறன். மாரிமுத்து, மார்க்கெட் நாகராஜன், நிர்வாகி மீர் அமீது உள்ளிட்ட நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர். இதில் திமுக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.