புதுச்சேரியில் தீபாவளிக்கு முன்பு விவசாயக் கடன் ரூ.12 கோடி தள்ளுபடி : முதல்வர் ரங்கசாமி உறுதி

புதுச்சேரி மாநிலம் ஊசுடு தொகுதிக்குட்பட்ட தொண்டமாநத்தம் கிராமத்தில் ரூ.2.55 கோடி மதிப்பில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், 2.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் புதிதாக கட்டப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட இந்த குடிநீர்த் திட்டத்தின் தொடக்க விழா தொண்டமாநத்தம் கிராமத்தில் இன்று நடைபெற்றது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் சாய் ஜெ.சரவணன்குமார் ஆகியோர் புதிய மேல்நிலைத் தொட்டியுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து நீர் ஏற்று மோட்டாரை இயக்கி வைத்து நீர்த்தேக்க தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தனர். நீரேற்று மைய வளாகத்தில் பசுமை சூழலை ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றினை துணைநிலை ஆளுநர் நட்டார். பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியது: “இந்த குடிநீர் திட்டங்களுக்கு 2015-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. மீண்டும் நான் முதல்வராக இருக்கும்போது திறக்கப்படுவது என்பது மிகுந்த மகிழ்ச்சி. ஏனென்றால் இடையில் நான் இல்லை. அதனால் வேறு யாராலும் இதனை திறக்க முடியவில்லை. மறுபடியும் முதல்வராக வந்து திறக்கின்ற நிலை இருந்து கொண்டிருக்கிறது. இப்போது அது நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் எல்லோருக்கும் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. சில இடங்களில் குடிநீரின் தன்மை மாறியிருந்தாலும், அதற்கு மாற்றாக நல்ல குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. நகரப்பகுதிகளில் உப்புநீர் உட்புகுந்துள்ளது. இதனால் நல்ல குடிநீர் கொடுப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுத்திருக்கிறது. கீழூர், சிவராந்தகம் பகுதிகளில் ரூ.450 கோடியில் ஆழ்குழாய் கிணறு போடப்பட்டு நகருக்கு குடிநீர் கொடுக்க திட்டமிடப்பட்டது. அங்கிருந்து குடிநீர் எடுக்க விவசாயிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம் தள்ளிப் போடப்பட்டுள்ளது.

ரூ.450 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. புதுச்சேரியில் கிராமப்பகுதிகளில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 70 லிட்டர் தண்ணீரும், நகரில் நபர் ஒருவருக்கு 140 லிட்டர் தண்ணீரும் கொடுக்கப்பட்டு வருகிறது. ஊசுடு ஏரி மேம்படுத்தப்பட்டு சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்டு மக்கள் வந்து கொண்டிருக்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் ஒரு சாலை கூட சீரமைக்கப்படவில்லை.

நாங்கள் பொறுப்பேற்ற பிறகு நிதி ஒதுக்கி நல்ல தார் சாலை, சிமென்ட் சாலை, பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும். அது இருந்தால் அனைத்து திட்டங்களையும் தன்னிச்சையாக செயல்படுத்த முடியும். நிர்வாக பிரச்சினை இருந்தாலும் மத்திய அரசின் உதவியுடன் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் இன்னும் அதிகமான வேலை வாய்ப்பை இளைஞர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என துணைநிலை ஆளுநர் கூறுவார். அதற்கான தொழிற்சாலைகளைக் கொண்டு வந்து வேலை வாய்ப்பை ஏற்படுத்த ஆலோசித்து வருகிறோம். சேதராப்பட்டில் தொழிற்பேட்டையை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

புதுச்சேரியில் விவசாயிகள் பெற்ற கடன் ரூ.13 கோடி உள்ளது. இதில் முதல் கட்டமாக ரூ.12 கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். தீபாவளிக்கு முன்பாகவே அந்த கடன் தள்ளுபடியை செய்து தீபாவளி பரிசாக கொடுக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் கூறியுள்ளார். ஆகவே தீபாவளிக்கு முன்பாகவே அந்த கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு கிடைக்கும். இதேபோன்று தீபாவளிக்கு முன்பாக ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு இலவச அரிசி உள்ளிட்டவை வழங்கப்படும். தீபாவளியை முன்னிட்டு 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை விரைவில் ரேஷன் கடைகள் மூலமாகவே வழங்கப்படும்” என்று முதல்வர் பேசினார்.