பருவமழை பாதிப்பை தடுக்க மாவட்ட அளவில் பயிர் பாதுகாப்பு குழுக்களை அமைக்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

பருவமழைப் பாதிப்புகளை தடுக்கும் வகையில், மாவட்ட அளவில் பயிர் பாதுகாப்புக் குழுக்களை அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சங்கத் தலைவர் எஸ்.குணசேகரன், பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டெல்டா மாவட்டங்களில் ஆர்வமுடன் சம்பா சாகுபடியைத் தொடங்கிய விவசாயிகள், தற்போது கவலையுடன் உள்ளனர். மேட்டூர் அணையின் நீர் இருப்பைக் கொண்டு, நடப்பு சாகுபடிப் பணிகளை முடிக்க இயலாது. கர்நாடக அரசு தனது அணைகளின் பாதுகாப்பு கருதி, உபரி நீரை மட்டுமே வெளியேற்றுகிறது. அதைக் கொண்டே கணக்கை முடிக்கப் பார்க்கிறது.

நடப்பாண்டு வடகிழக்குப் பருவமழை கூடுதலாக பொழியும் என்று அறிவிப்பு வந்துள்ள நிலையில், பயிர்களைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் விவசாயிகளுக்கு இருக்கிறது. ஆனால், தேவையான டிஏபி, யூரியா, பொட்டாஷ் போன்ற ரசாயன உரங்கள், நுண்ணூட்டச் சத்துகள் ஆகியவை பல கூட்டுறவு நிறுவனங்களில் போதுமான அளவுக்குக் கிடைக்கவில்லை. கூட்டுறவு பயிர்க் கடன் வழங்குவதற்கான மனுக்களை பெற்றும், நிறைய விவசாயிகளுக்கு கடன் கிடைக்கவில்லை.

சாகுபடிச் சான்று கொடுப்பதில் வருவாய்த் துறை அலுவலர்களின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. எனவே, விவசாயிகளுக்கு பயிர்க் கடன்கள் மற்றும் தேவைப்படும் உரங்களை வழங்க வேண்டும். இவற்றைக் கண்காணித்து, முறைப்படுத்தி செயல்படுத்த வேளாண், கூட்டுறவு மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளையும் சேர்த்து, மாவட்ட அளவிலான பயிர் பாதுகாப்புக் குழுவை ஏற்படுத்த வேண்டும். அணைகளில் திறந்துவிடப்படும் தண்ணீர், கடைநிலை வாய்க்கால் வரை செல்வதை பொதுப்பணித் துறை உறுதிப்படுத்த வேண்டும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, மாதாந்திர அடிப்படையில் தமிழகத்துக்கு உரிய காவிரி நீரைப்பெற, மாநில அரசு சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.