போதைப் பொருட்களை ஒழிப்பதில் காவல்துறை தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார்.
வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் அமைப்பு, ரோட்டரி க்ளப் ஆப் ராஜபாளையம் கிங்ஸ் சிட்டி மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் இன்று போதை ஒழிப்பு பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது. சங்கரன்கோவிலில் பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி திருவேங்கடம் ரோடு, யுபிவி மைதானம் வரை நடைபெற்றது. பின்னர் அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேசன் நிறுவனர் ஆனந்தன் அய்யாசாமி வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது, ”இந்தியாவில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த காலத்தில் ஒவ்வொரு நாள் மாலையிலும் ராஜ்பவனில் பூஜை நடைபெற்று வருகிறது. இந்த காலத்தில் நான் தினமும் நவராத்திரி பூஜையில் பங்கேற்பது வழக்கம். சங்கரன்கோவிலில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுக்காக அழைத்ததால் இக்கட்டான நிலையிலும் நிகழ்ச்சியில் பங்கேற்க சம்மதித்தேன். போதைப் பழக்கத்தால் குடும்பங்கள், சமுதாயம் சீரழிகிறது.
நாட்டின் பல பகுதிகள் போதைப் பொருட்களால் பாதிக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலம் 40 ஆண்டுகளுக்கு முன்பு நன்கு வளர்ச்சியடைந்த மாநிலமாக இருந்தது. போதைப் பழக்கம் அந்த நிலையை சீரழித்துவிட்டது. போதைப் பொருட்களுக்கு எதிராக போராடி அதனை நாம் ஒழிக்க வேண்டும். மது, புகைப் பழக்கம் உடல் நலத்துக்கு தீங்கானது. 30 வகையான போதைப் பொருட்கள் ரசாயனங்களால் உருவாக்கப்பட்டவை. இவை மிகவும் அபாயகரமானவை.
இளைஞர்கள், மாணவர்கள் போதைப் பொருட்களால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். முதலில் வேடிக்கையாக ஆரம்பிக்கும் போதைப் பழக்கம் குறுகிய காலத்தில் உயிரை மாய்த்துவிடும். போதை பழக்கத்துக்கு ஆளானவர்கள் திருட்டு, குற்றச் செயல்களில் ஈடுபட தொடங்கி எதிர்பாலத்தை இழக்கின்றனர். தமிழகத்தில் கஞ்சா புழக்கம் பற்றி அதிகமாக பேசப்படுகிறது. வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு வகையான போதைப் பொருட்கள் புழக்கத்தில் உள்ளன. அபாயகரமான கஞ்சாவை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
காவல்துறை போதைப் பொருட்களை ஒழிப்பதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். காவல்துறையினர் டன் கணக்கில் கஞ்சாவை பறிமுதல் செய்வதாக செய்திகளில் பார்க்கிறேன். ஆனால் ரசாயனங்களால் தயாரிக்கப்பட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்யவில்லை. ஆனால் மத்திய அமைப்புகள் அதுபோன்ற போதைப் பொருட்களை பறிமுதல் செய்கின்றன. ஏன் இதுபோல் நடக்கிறது என என் மனதில் கேள்வி எழுகிறது. தமிழகத்தில் பல மாணவர்கள், இளைஞர்கள் ரசாயன போதைப் பொருட்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் என்னிடம் புகார் கூறுகின்றனர்.
போதைப் பொருட்களை ஒழிக்க பெரிய அளவிலான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். நான் நாகாலாந்து ஆளுநராக இருந்தபோது, எல்லைகள் வழியாக நீண்டகாலமாக போதைப் பொருட்கள் புழக்கம் இருந்தது தெரியவந்தது. நான் கிராமப்புற இளைஞர்களை எல்லைகளில் கண்காணிப்பில் ஈடுபட வைத்து முழுமையாக கட்டுப்படுத்தினேன். ஒவ்வொரு இளைஞர் மீதும் பெற்றோர்கள் பெரும் நம்பிக்கை, எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையை சிதைத்துவிடக்கூடாது.
பள்ளி, கல்லூரிகளில் போதைப் பழக்கத்துக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். பிள்ளைகளின் செயல்பாடுகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். பிள்ளைகளுக்காக தினமும் நேரத்தை செலவிட்டு அவர்களுடன் உரையாட வேண்டும். அவர்களை தனிமையில் இருக்க பழக்கப்படுத்தக் கூடாது. போதைப் பொருளுக்கு எதிராக ஒவ்வொருவரும் தூதுவராக செயல்பட்டு நமது குடும்பம், சமுதாயம், நாட்டை பாதுகாக்க வேண்டும்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர்வேம்பு பேசும்போது, ”1956-ல் ஏழை நாடாக இருந்த சிங்கப்பூர் இப்போது உலகின் பணக்கார நாடுகள் பட்டியலில் உள்ளது. போதைப் பொருளின் தாக்கத்தை தடுக்க கடுமையான தண்டனையை கொண்டுவந்தனர். இதனால் போதைப் பொருளை ஒழித்தது சிங்கப்பூர். போதைப் பொருட்களால் அமெரிக்காவில் பல நகரங்கள் நரகங்கள்போல் ஆகிவிட்டன. ஓராண்டுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் போதைப் பொருட்களால் அங்கு உயிரிழக்கின்றனர். வளர்ச்சியடைய சிங்கப்பூர் பாதையை கற்றுக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கை, தன்னார்வம், தன்னொழுக்கம் இருந்தால்தான் வாழ்க்கையில் சாதிக்க முடியும். அதற்கு போதைக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும்” என்றார்.
மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சைதை துரைசாமி பேசும்போது, ”இந்திய அளவில் 32 சதவீதம் பேர் மது அருந்துகின்றனர். மீதி 68 சதவீதம் பேரை காக்க வேண்டியது அரசின் கடமை. மது அருந்துபவர்களுக்கு பர்மிட் முறையை கொண்டுவர வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வகையில் முதலில் டாஸ்மாக் கடைகளில் பார்களை ஒழிக்க வேண்டும். வீட்டில்தான் மது அருந்த வேண்டும் என்ற நிலையை கொண்டுவர வேண்டும். அரசு முயற்சித்தால் 5 அல்லது 10 ஆண்டு காலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்திவிடலாம்” என்றார். ரோட்டரி சங்க நிர்வாகிகள் ராஜவேல், விக்ரம்குமார், சிவகுமார்ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.