புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் மற்றும் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகள் திறப்பு விழா

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் மற்றும் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று திறந்து வைத்தார்.

பின்னர் சட்டத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் கிராமப்புறங்களில் வாழும் பொதுமக்களின் பொருளாதாரத்தினை உயர்த்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், கிராமப்புறங்களில் குடிநீர் வசதி, மின் வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருமயம் மற்றும் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகள் திறந்து வைக்கப்பட்டது.

திருமயம் ஊராட்சி ஒன்றியம், வி.லெட்சுமிபுரம் ஊராட்சியில், ஒன்றிய பொதுநிதித் திட்டத்தின்கீழ், ரூ.13 லட்சம் செலவில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.7 லட்சம் செலவில் புதிய கலையரங்கம் கட்டடத்தையும், புதிய மின்மாற்றியினையும் மற்றும் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், கவிநாடு மேற்கு ஊராட்சி அகரப்பட்டியில் ரூ.12.10 லட்சம் செலவிலும் மற்றும் பெருமாள்பட்டியில் ரூ.14 லட்சம் செலவிலும் புதிய அங்கன்வாடி கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டது. இதன்மூலம் இப்பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவைகள், மின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

எனவே தமிழக அரசு பொது மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் இத்தகைய வளர்ச்சித் திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்திக் கொண்டு தங்களது வாழ்வினை முன்னேற்றிக் கொள்ள வேண்டும் அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார். இந்நிகழ்ச்சிகளில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி தமிழ்செல்வன், புதுக்கோட்டை ஒன்றியக் குழுத்தலைவர் பெ.சின்னையா, ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு (எ) சிதம்பரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆர்.சங்கர் (திருமயம்), பி.வெங்கடேசன் (திருமயம்), பி.எஸ்.இந்திராகாந்தி (புதுக்கோட்டை), வட்டாட்சியர் புவியரசன், ஊராட்சிமன்றத் தலைவர்கள் ராமசாமி (வி.லெட்சுமிபுரம்), ம.சூர்யா (கவிநாடு மேற்கு) மற்றும் கணேசன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.