ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் இருவரை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றது.
இது தொடர்பாக ஸ்ரீநகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சினார் கார்ப்ஸ் ராணுவப் பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் குகல்தார் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயல்வதாகக் கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இந்திய ராணுவமும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் இணைந்து நடவடிக்கையைத் தொடங்கின.
சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கண்டறிந்த பாதுகாப்புப் படையினர், அவர்களுக்கு சவால் விடுத்தனர். இதையடுத்து, பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். எச்சரிக்கை அடைந்த பாதுகாப்புப் படையினர், திறம்பட துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து அங்கு நடத்தப்பட்ட சோதனையில், பயங்கரவாதிகளின் ஆயுதக் கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.