விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழக மாநாட்டு பணிக்காக இன்று அதிகாலை பந்தல் கால் நடப்பட்டது.
நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழக மாநாடு இம் மாதம் 27-ம் தேதி விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெறுகிறது. இம்மாநாட்டுக்கு கடந்த 25-ம் தேதி இரவு காவல் துறை 17 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது. இதையடுத்து இன்று அதிகாலையில் மாநாட்டுக்கான பந்தல் கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. புதுச்சேரி விக்னேஷ் குருக்கள் தலைமையில் சபரீஷ் குருக்கள், சுந்தரேஸ்வர குருக்கள் மந்திரங்கள் சொல்ல மும்மதங்கள் சார்ந்த படங்களை வைத்து மும்மதம் சார்ந்த புனித நீர் தெளித்து பூஜை நடந்தது.
கட்சித் தொண்டர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் இன்று காலை சரியாக காலை 4.50 மணிக்கு மாநாட்டிற்காக சென்னை மாநாட்டு பந்தல் அமைப்பாளர் ஆனந்தன் பந்தல் காலை நட்டார். அதைத் தொடர்ந்து தவெக மாநிலச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நேற்று இரவு பெய்த மழையால் மாநாட்டு மைதானம் சேறும் சகதியுமாக இருந்தது. என்றபோதும் சுமார் 5 ஆயிரம் பேர் அதிகாலை இருட்டு வேளையிலும் சிரமங்களைப் பொருட்படுத்தாது பந்தல் கால் நடும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.
இந்நிகழ்ச்சிக்காக தமிழகம் முழுவதுமிருந்து அனைத்து மாவட்டங்களிலிருந்தும் அம்மாவட்டத்தின் பிரசித்திபெற்ற கோயில்களிலிருந்து தீர்த்தங்கங்கள் எடுத்துவரப்பட்டு பந்தல் கால் நடும்போது தெளிப்பதற்காக கட்சியினரால் கொண்டுவரப்பட்டது.
இதுகுறித்து பேசிய தவெகவினர், “குறைந்தபட்சம் பந்தகால் நடும் பகுதியில் இருக்கை, குடிநீர் வசதிகளையாவது செய்து வைத்திருக்கலாம். நாங்கள் பொறுப்புடன் கொண்டு வந்திருந்த புனித நீரைப் பெற்று பந்தல் கால் நடும்போது தெளிக்கக்கூட யாருக்கும் அக்கறை இல்லை. நாங்களே ஆங்காங்கே நின்றபடி கொண்டு வந்த தீர்த்தத்தை தெளித்துவிட்டோம். மொத்தத்தில் சரியான ஒருங்கிணைப்பு இல்லை. இதற்கே இப்படி என்றால் மாநாட்டை எப்படி சொதப்பாமல் நடத்தப் போகிறார்கள் என்று தெரியவில்லை.” என்று ஆதங்கப்பட்டனர்.
இது குறித்து கருத்தறிய புஸ்ஸி ஆனந்த் தங்கி இருந்த தங்கும் விடுதிக்கு பத்திரிகையாளர்கள் சென்றனர். ஆனால், அங்கிருந்த பவுன்சர்கள் பத்திரிகையாளர்களை அடிக்காத குறையாக விரட்டி அடித்தனர். புஸ்ஸி ஆனந்தை சந்திக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட தவெக பொறுப்பாளர் பரணி பாலாஜியை தொடர்பு கொண்டு பத்திரிகையாளர்கள் சொன்னதற்கு, “5 நிமிடம் அங்கேயே காத்திருங்கள்” என்றார். ஆனபோதும், கடைசிவரை பத்திரிகையாளர்களை மாநிலச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் யாரும் சந்திக்கவே இல்லை.
மாநாடு நடைபெறும் இடத்தை சமன்படுத்தும் பணி தற்போது தொடங்கியுள்ளது. 50 அடி உயரம் 800 அடி அகலத்தில் செயின் ஜார்ஜ் கோட்டை போன்ற முகப்பு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்ள கட்சி தொண்டர்களுக்கு நடிகர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். நடிகர் விஜய் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வி.சாலை எனும் வெற்றி சாலையில் சந்திப்போம். மாநாடு தொடங்கி முடியும் வரை ராணுவ கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா என சிலர் கேள்விக் கணைகளை வீசுகிறார்கள். மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் போதுதான் அவர்களுக்கு என்னவென்று தெரியும்.
தவெக மற்ற கட்சிகளை போல சாதாரண இயக்கம் அல்ல.ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி இல்லை என்பதை மாநாடு மூலம் நிரூபிப்போம். வீறு கொண்டு எழுந்து அரசியல் களத்தில் வெற்றி காணப்போகிற கட்சி என்பதை இனிமேல் புரிந்து கொள்வர். மக்கள் இயக்கமாக இருந்த நாம் மக்களோடு மக்களாக களமாடி அரசியல் உரிமைகளை வென்றெடுக்க போகிறோம். தவெகவின் முதல் மாநாடு என்பது நம் அரசியல் கொள்கை பிரகடன மாநாடு. பொறுப்பான மனிதனைத்தான் குடும்பம் மதிக்கும். பொறுப்பான. மக்கள் இயக்கமாக இருந்த நாம் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கும் இயக்கமாக மாறிவிட்டோம். மக்களுக்கு இன்னமும் முழுமை பெறாத அடிப்படை தேவைகளை நிரந்தரமாக பூர்த்தி செய்ய வேண்டும். என் நெஞ்சில் நீண்ட காலமாக அணையாமல் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டே இருக்கும் லட்சியக் கனல் இதுதான்” என்று விஜய் தெரிவித்துள்ளார்.