“நடிகர் விஜய், தமிழக இளைஞர்கள் மத்தியில் மன்னிப்புக் கேட்க வேண்டும். மாநாட்டுக்கு முன்பாக மன்னிப்புக் கேட்காத பட்சத்தில், இந்து மக்கள் கட்சி சார்பில், சென்னையில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டை முற்றுகையிடுவோம்” என இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் டி.குருமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற உள்ள முதல் மாநில மாநாட்டின் ஆலோசனைக் கூட்டம் தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த், அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய போது, ‘இளைஞர்களை வேலையை விட்டு விட்டு மாநாட்டுக்கு வர வேண்டும்’ எனப் பேசி உள்ளார்.
இதேபோல் கும்பகோணத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பெண் ஒருவர் ‘எனது சகோதரன், நடிகர் விஜயை நம்பி, மன்றம் தொடங்கி அதற்காக செலவு செய்ததால், தற்போது எனது குடும்பம் நடுத்தெருவில் உள்ளது’ என முறையிட்டார். அப்போது, அங்கிருந்த பவுன்சர்கள், அந்தப் பெண்ணை அறைக்குள் அழைத்துச் சென்று பூட்டினர்.
தனது தொண்டர்கள், இளைஞர்களின் உழைப்பில் பதவி சுகத்துக்காக அவர்களது வாழ்க்கையைச் சீர்குலைத்து கேள்விக்குறியாக்க நினைக்கும் நடிகர் விஜய் நடத்தும் மாநாட்டுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். நடிகர் விஜய், தமிழக இளைஞர்கள் மத்தியில் மன்னிப்புக் கேட்க வேண்டும். மாநாட்டுக்கு முன்பாக மன்னிப்புக் கேட்காத பட்சத்தில், இந்து மக்கள் கட்சி சார்பில், சென்னையில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டை முற்றுகையிடுவோம்” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.