அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் : டாஸ்மாக் விற்பனையாளர்கள் வலியுறுத்தல்

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கத்தின் மாநில ஆலோசனைக் கூட்டம் வண்டலூரில் இன்று நடைபெற்றது. இதில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் டாஸ்மாக்கில் 21 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரப்படுத்தி, அவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்களுக்கு இஎஸ்ஐ முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்கள் திரும்பப்பெறும் பணியை டெண்டர் மூலம் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்.

பில்லிங் முறையை நடைமுறைப்படுத்துவதால் கடைகளில் விற்பனைக்கு ஏற்றார் போல் பணி நிரவல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து டாஸ்மாக் அனைத்து மண்டல அலுவலகம் முன்பும் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் சிவா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சந்திரகுமார் முன்னிலை வகித்தார். மாநில சிறப்புத் தலைவர் சொ. இரணியப்பன், சங்க வழக்கறிஞர் அதியமான், செங்கல்பட்டு மாவட்ட ஏஐசிசிடியு துணைத்தலைவர் தினேஷ்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சங்கத்தின் மாநில பொருளாளர் ஆறுமுகம், மாநிலச் செயலாளர்கள் ராஜவேல், அழகுமலை, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைவர் தட்சணாமூர்த்தி, மாவட்டச் செயலாளர் எத்திராஜ், மாவட்ட பொருளாளர் பழனிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.