“எத்தனை சிரமங்கள் வந்தாலும், அன்னை சாமுண்டேஸ்வரியின் அருள் இருப்பதால் ஐந்தாண்டுகள் ஆட்சி செய்வோம்” என்று மைசூர் தசரா தொடக்க விழாவில் பங்கேற்று பேசிய முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழா இன்று தொடங்கியது. தொடக்க விழாவில் பங்கேற்று பேசிய முதல்வர் சித்தராமையா, “வண்ணமயமான வார்த்தைகளால் மக்களின் வயிற்றை நிரப்ப முடியாது. அதனால் தான், தேர்தலின் போது வாக்குறுதி அளித்தபடி, மக்கள் நலத்திட்டங்கள் மூலம் சமூக, பொருளாதார ரீதியில் மக்களை வலுவூட்டும் பணியை செய்து வருகிறோம். தேர்தலின் போது அன்னை சாமுண்டேஸ்வரி சன்னிதானத்தில் நானும் டி.கே.சிவகுமாரும் தேர்தலில் வெற்றி பெற்றால் 5 உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றுவோம் என வாக்குறுதி அளித்தோம். அதன்படி தேர்தலில் வெற்றி பெற்று எட்டு மாதங்களுக்குள் 5 திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளோம்.
உத்தரவாதத் திட்டங்கள் மூலம் நலிவடைந்த பிரிவினரை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மேம்படுத்துவதற்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஒவ்வொரு பயனாளி குடும்பமும் ஆண்டுக்கு ரூ. 40,000 முதல் ரூ. 50,000 வரை நிதியுதவி பெறுகின்றனர். கிரஹலட்சுமி திட்டத்தின் கீழ் 1.21 கோடி வீடுகளைச் சேர்ந்த பெண்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.2 ஆயிரம் பெறுகிறார்கள். கிரஹ ஜோதி திட்டத்தின் கீழ் 1.40 கோடி குடும்பங்கள் இலவச மின்சார வசதியைப் பெறுகின்றன. யுவ நிதி திட்டத்தின் கீழ் 1.82 லட்சம் வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ பெற்றவர்கள் நிதி உதவியை பெறுகின்றனர்.
இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளதால், மாநிலம் முழுவதும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மாநிலத்தில் 99 சதவீதம் பருவமழை விதைப்பு நடந்துள்ளது. எங்கள் எதிர்பார்ப்பை விட அதிக மழை, அதிக விளைச்சல், அதிக மகசூல் கிடைக்க அன்னை சாமுண்டீஸ்வரியை பிரார்த்திக்கிறேன். மழை – பயிர்களால் மட்டுமே மக்கள் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும். இந்த முறை நல்ல மழை பெய்து வருவதால் தசரா விழாவை பிரம்மாண்டமாக நடத்த அறிவுறுத்தியுள்ளேன். தசரா ஒரு தேசிய விழாவாக இருக்க வேண்டும். அனைத்து நிகழ்ச்சிகளிலும் மக்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்.
மக்களின் ஆசியுடன் ஆட்சியமைக்க வந்துள்ளோம். மாநில மக்கள் எங்களுக்கு 5 ஆண்டுகள் வாய்ப்பு அளித்துள்ளனர். எத்தனை சிரமங்கள் வந்தாலும், அன்னை சாமுண்டேஸ்வரியின் அருள் நமக்கு இருப்பதால் ஐந்தாண்டுகள் ஆட்சி செய்வோம். உண்மை எப்போதும் வெல்லும். உங்கள் அனைவரின் ஆசியும், இந்த மாநில மக்களின் ஆசிர்வாதமும் இந்த அரசுக்கு இருக்கும் வரை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. சட்டப்பேரவைத் தேர்தலில் ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளேன். மூன்று முறை தோற்றுள்ளேன்.
அன்னை சாமுண்டீஸ்வரி மற்றும் இங்குள்ள மக்களின் ஆசியால் நான் இரண்டாவது முறையாக முதல்வரானேன். இதுவரை எந்த தவறும் செய்யவில்லை. தவறு செய்திருந்தால் இவ்வளவு நாள் அரசியலில் இருந்திருக்க முடியாது. நான் நீதிமன்றங்களை நம்புகிறேன். மனசாட்சிப்படி செயல்பட முயல்கிறேன். காந்தியடிகள் கூறியது போல், மனசாட்சி நீதிமன்றம்தான் அனைத்து நீதிமன்றங்களிலும் உயர்ந்தது. நான் என் மனசாட்சிப்படி நடந்து கொண்டேன் என்று உறுதியாக நம்புகிறேன். நாம் ஒருவரையொருவர் நேசிப்போம். யாரையும் வெறுக்காதீர்கள். ஒருவரையொருவர் நேசித்து மனிதனாக வாழ வேண்டும் என்ற செய்தியை அனைத்து மதங்களும் வழங்கியுள்ளன” என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.