ஓவியம், சிற்பக் கலையில் சாதித்த 6 பேருக்கு தமிழக அரசின் கலைச் செம்மல் விருது அறிவிப்பு

ஓவியம் மற்றும் சிற்பக் கலையில் சாதனை படைத்த 6 கலைஞர்களுக்கு தமிழக அரசின் கலைச் செம்மல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து கலை, பண்பாட்டுத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையின், ஓவிய நுண்கலைக் குழு வாயிலாக, தமிழகத்தைச் சேர்ந்த மரபுவழி கலை வல்லுநர்கள், நவீனபாணி கலை வல்லுநர்களுக்கு அவர்கள் நுண்கலைத் துறையில் செய்துள்ள சாதனைகள், சேவைகளை பாராட்டும் வகையில் ஆண்டுக்கு 6 கலைஞர்களுக்கு கலைச் செம்மல் விருதும், தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த 2024-25-ம் ஆண்டு கலைச் செம்மல் விருதுக்கான கலைஞர்களை தேர்வு செய்யும் வகையில் தேர்வாளர்கள் கூட்டம் கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் சே.ரா.காந்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஓவியர்கள் சு.சந்தானக்குமார், எம்.சேனாதிபதி, வி.மாமலைவாசகன், டி.விஜயவேலு, திரு.சேஷாத்திரி மற்றும் விஸ்வம் ஆகியோர் பங்கேற்றனர். இக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட 6 கலைஞர்களுக்கு கலைச் செம்மல் விருதுகள் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், மரபுவழி ஓவியப் பிரிவில், ஓவியர் ஏ.மணிவேலு, மரபுவழி சிற்பப் பிரிவில் லே.பாலச்சந்தர் மற்றும் கோ.கன்னியப்பன், நவீனபாணி ஓவியப் பிரிவில் கே.முரளிதரன் மற்றும் ஏ.செல்வராஜ், நவீனபாணி சிற்பப் பிரிவில் ரா.ராகவன் ஆகியோருக்கு கலைச் செம்மல் விருது வழங்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.