இந்திய – இலங்கையை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்களிப்பில் செயற்கைக் கோள் தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் இன்று கையெழுத்தானது.
இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் விண்வெளி ஆய்வுத் திறன்களை வளர்ப்பதற்கு இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (எஸ்எல்ஐஐடி) முடிவு செய்துள்ளது. அந்த வகையில் மாணவர்கள் தலைமையிலான செயற்கைக் கோள் தயாரிப்பு திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தைச் சேர்ந்த ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ அமைப்புடன் இணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எஸ்எல்ஐஐடி நிறுவனம் சென்னையில் இன்று கையெழுத்திட்டது.
இந்நிகழ்ச்சியில் எஸ்எல்ஐஐடி நிறுவனத்தின் தலைவர் இண்டி பத்மநாதன், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் நிறுவனர் ஸ்ரீமதி கேசன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இலங்கையில் மாணவர்கள் பங்களிப்பில் மேற்கொள்ளப்படும் முதல் விண்வெளி ஆய்வுத் திட்டம் இதுவாகும். இதன் வாயிலாக யாழ்ப் பாணத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களும், இந்திய மாணவர்களும் கூட்டாக சேர்ந்து செயற்கைக் கோளை வடிவமைக்க உள்ளனர்.
இந்த செயற்கைக் கோள் வளிமண்டல ஆய்வு, தகவல் தொடர்பு பயன்பாட்டுக்கு உதவிகரமாக இருக்கும். இது இஸ்ரோ மூலம் அடுத்தாண்டு விண்ணில் நிலைநிறுத்தப்படும். இந்நிகழ்ச்சியில் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனர் ஸ்ரீமதி கேசன் பேசுகையில், “விண்வெளிக்கு எந்த எல்லையும் கிடையாது. அதேபோல், மற்ற நாடுகளுக்கும் விண்வெளி தொழில் நுட்பத்தை விரிவாக்கும் வகையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை அரசு சார்பில் தேர்வு செய்து தரப்படும் மாணவர்களுக்கு ஸ்பேஸ் கிட்ஸ் மூலம் விண்வெளி சார்ந்த பல்வேறு தகவல்களையும் கற்றுத்தர உள்ளோம். அந்த மாணவர்களுக்கு ஒருமுறை பயன்படுத்தும் செயற்கைகோளை உருவாக்குவது சார்ந்து பயிற்சிகள் அளிக்கப்படும். அவர்கள் உருவாக்கும் செயற்கைக்கோள்கள் இஸ்ரோ மூலமாக அடுத்தாண்டு இறுதியில் ஏவப்படும்” என்றார்.
தொடர்ந்து இண்டி பத்மநாதன் கூறும்போது, “இந்த முயற்சி விஞ்ஞான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர கண்டுப்பிடிப்பு கலாச்சாரத்தை வளர்ப்பதில் இரு நாடுகளுக்கும் உத்வேகம் அளிக்கும். இரு நாடுகளின் மாணவர்கள் செயற்கைக் கோள் தொழில் நுட்பத்தின் நுணுக்கங்கள் குறித்து அறிந்து கொள்ள உதவும். இரு கட்டங்களாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பின்பு செயற்கைக் கோள் தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். யாழ்ப்பாண மாணவர்கள் உலக அளவில் சாதிக்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
இந்நிகழ்வில் இஸ்ரோவின் இன்ஸ்பேஸ் (அகமதாபாத்) அமைப்பின் இயக்குநர் பிரபுல்ல குமார் ஜெயின், உலக விண்வெளி வாரச் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் அல்மா ஒக்பலேப் மற்றும் உளவியலாளர் சரண்யா ஜெய்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.