கடத்தல் காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2,950 கிலோ கஞ்சாவை, போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் தீயிட்டு அழித்தனர்.
போதைப் பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனை செய்வோரை தமிழக காவல்துறையின் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் தமிழகம் முழுவதும் கண்காணித்து வருகின்றனர். இதுதொடர்பாக, அடிக்கடி சோதனையில் ஈடுபட்டும் வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக போதைப் பொருள் கடத்துதல், பதுக்குதல், விற்பனை செய்தது தொடர்பாக 89 வழக்குகளில் 2,950 கிலோ கஞ்சா கடத்தல் காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
இதை அழிக்க போலீஸார் முடிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் அனுமதி பெற்று அதன் அடிப்படையில், ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்டிருந்த 2,950 கிலோ கஞ்சாவை போதைப்பொருள் ஒழிப்பு குழுமத்தின் மேற்பார்வையில் செங்கல்பட்டு தென்மேல்பாக்கம் பகுதியில் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் கடந்த 30-ம் தேதி தீயிலிட்டு அழித்தனர்.
போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரால் கடந்த மார்ச் 2024-ல் 3,685 கிலோவும், ஆகஸ்ட் 2024-ல் 6,165 கிலோவும் மற்றும் தற்போது 2,950 கிலோவும் என 2024-ம் ஆண்டில் இதுவரை 12,800 கிலோ கஞ்சா தீயிலிட்டு அழிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. போதைப்பொருள் குற்றவாளிகளின் வலையமைப்பை தொடந்து கண்காணிக்க சட்டம் – ஒழுங்கு போலீஸாருடன் இணைந்து பிறமாநில போலீஸார் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பினருடன் நெருக்கமாக பணியாற்றி வருகின்றனர்.
போதைப்பொருள் மற்றும் மனமயக்க பொருட்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான எந்தவொரு தகவலையும் 10581 என்ற கட்டணமில்லா உதவி எண்ணிலும், 9498410581 என்ற வாட்ஸ்அப் மூலமாகவும் அல்லது spnibcid@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தெரியப்படுத்த வேண்டும், என்று போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு கூடுதல் டிஜிபி-யான அமல்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.