வாடகை வாகனங்களை தடை செய்யக் கோரி புதுவையில் இன்று ஆட்டோ ஓட்டுநர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி தொழிலாளர்கள் சீருடையுடன் ஊர்வலம் நடத்தினர்.
புதுவையில் வாடகை வாகனங்கள், இ-பைக் சேவையை தடை செய்ய வேண்டும்; அமைப்பு சாரா நலவாரியத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்; அரசு செயலி உருவாக்கி குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை புதுவை மாநில அனைத்து ஆட்டோ சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் இன்று ஸ்டிரைக் அறிவித்திருந்தனர். இருப்பினும் இன்று காலை 10 மணி வரை வழக்கம்போல ஆட்டோக்கள் இயக்கப்பட்டன.
இன்று பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்ல மாட்டோம் என அறிவித்திருந்தாலும், மாணவர்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கின. பள்ளி நேரம் முடிந்ததும் நகர பகுதியில் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள் புதிய பேருந்து நிலையம் அருகே ஆட்டோக்களுடன் சீருடையுடன் ஒன்று கூடினர். மறைமலை அடிகள் சாலையில் ஆட்டோக்களை சங்கக் கொடிகளுடன் நிறுத்தினர்.
பின்னர் அங்கிருந்து ஆட்டோ தொழிலாளர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்தில் ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் சேது செல்வம், மணவாளன், சீனுவாசன், விஜயகுமார், அந்தோணி தாஸ், சேகர், பாப்புசாமி, கண்ணன், அற்புதராஜ், செந்தில், மணிவண்ணன், முருகன், சங்கர், சிவகுமார், அன்பழகன், அய்யனார் உட்பட நிர்வாகிகள் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் மறைமலை அடிகள் சாலை, அண்ணாசாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக சட்ட சபை நோக்கி வந்தது. ஆம்பூர் சாலையில் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அங்கு ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர்.