கருணை அடிப்படையில் புதுவை சுகாதாரத் துறையில் 126 ஊழியர்கள் நியமனம் செய்யப்படவிருப்பதாகவும் அதற்கான கோப்பு தயாராகிக் கொண்டிருப்பதாகவும் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுவை அரசின் சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை இணைந்து தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு மற்றும் மருத்துவ முகாமை ஜவகர் நகரில் உள்ள உழவர்கரை நகராட்சி அலுவலகத்தில் நடத்தியது. இவ்விழாவுக்கு முதல்வர் ரங்கசாமி தலைமை வகித்து, மருத்துவ முகாமை தொடங்கி வைத்தும், தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடைகளை வழங்கியும் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: சுகாதாரத் துறையும், உள்ளாட்சித் துறையும் இணைந்து செயல்பட்டால்தான் மாநிலத்தை தூய்மையாக வைத்திருக்க முடியும். மாநிலம் தூய்மையாக இருந்தால்தான் நோய், நொடியின்றி சுகாதாரமாக நாம் வாழ முடியும். அதற்கான பணிகளை இரு துறைகளும் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டும். உள்ளாட்சித் துறை மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணியையும் செய்து வருகிறோம். குப்பைகளை அள்ள தனியார் நிறுவனத்திடம் பணிகளை வழங்கியுள்ளோம்.
அவர்கள் ஆண்டு முழுவதும் இரவு, பகல் பாராமல் குப்பைகளை அள்ளி வருகின்றனர். இதற்காக கோடிக்கணக்கில் அரசு பணம் செலவழிக்கிறது. தனியார் நிறுவனம் விதிமுறைப்படி குப்பைகளை அகற்றுகிறார்களா என உள்ளாட்சித் துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். அவர்கள் சரியாக செயல்படாவிட்டால் அபராதம் விதிக்க வேண்டும். அதேபோல், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவர்களுக்கான பில் தொகையை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களால் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்படும்.
சுகாதாரத் துறையில் ஒரு காலத்தில் மருந்துகள் இல்லை என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது அனைத்து மருந்துகளும் உள்ளது. கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரியில் 13 அறுவை சிகிச்சை கூடங்கள் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதற்கான நிபுணர்களையும் நியமிக்க உள்ளோம். மாநிலத்தில் மருத்துவ வசதியை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம்.
அரசுத் துறைகளில் சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் அதிகளவில் பணியின்போது பாதிக்கப்பட்டு இறந்து விடுகின்றனர். இவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க முடிவு செய்துள்ளோம். அதன்படி சுகாதாரத் துறையில் 126 வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட உள்ளது. இதற்கான கோப்பு தயாராகி வருகிறது. இதேபோல் உள்ளாட்சித் துறையிலும் பணியின் போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க உள்ளோம் என்று முதல்வர் ரங்கசாமி கூறினார்.