அறுவை சிகிச்சை நிபுணரான வைஸ் அட்மிரல் ஆர்த்தி சரின் இன்று ஆயுதப்படை மருத்துவ சேவைகள் பிரிவின் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றார். இந்த உயர் பதவியை வகிக்கும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். ஆயுதப்படைகள் தொடர்பான ஒட்டுமொத்த மருத்துவக் கொள்கை விஷயங்களில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அவர் நேரடியாக பொறுப்பு வகிப்பார்.
46-வது தலைமை இயக்குநராக பொறுப்பேற்றுள்ள ஆர்த்தி சரின், இதற்கு முன் கொடி அதிகாரி மருத்துவ சேவைகள் (கடற்படை) தலைமை இயக்குநர், மருத்துவ சேவைகள் (விமானம்) தலைமை இயக்குநர் மற்றும் புனேவின் ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியின் இயக்குநர் உள்ளிட்ட மதிப்புமிக்க பொறுப்புக்களை வகித்துள்ளார். புனேவின் ஏ.எஃப்.எம்.சியின் முன்னாள் மாணவரான இவர், 1985 டிசம்பரில் ஆயுதப்படை மருத்துவ சேவைகளில் நியமிக்கப்பட்டார். கதிரியக்க பிரிவில் பல பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.
38 ஆண்டு கால மருத்துவ சேவையில் பல பொறுப்புகளை ஆர்த்தி சரின் வகித்துள்ளார். இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் முதல் கேப்டன் வரை, இந்திய கடற்படையில் சர்ஜன் லெப்டினன்ட் முதல் சர்ஜன் வைஸ் அட்மிரல் வரை, இந்திய விமானப் படையில் ஏர் மார்ஷல் வரை பணியாற்றிய கொடி அதிகாரி ஆர்த்தி சரின், இந்திய ஆயுதப் படைகளின் மூன்று பிரிவுகளிலும் பணியாற்றிய அரிய பெருமையைப் பெற்றுள்ளார்.
நோயாளிகள் பராமரிப்பில் உயர்ந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்ட ஆர்த்தி சரினின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில், கொடி அதிகாரிக்கு 2024-ல் அதி விஷிஸ்ட் சேவா பதக்கம் மற்றும் 2021 இல் விஷிஸ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்டது. சிறப்பான சேவைக்காக ராணுவத் தளபதி பாராட்டு (2017), கடற்படைத் தளபதி பாராட்டு (2001) மற்றும் பொது அதிகாரி கமாண்டிங் – இன்-சீஃப் பாராட்டு (2013) ஆகியவற்றையும் அவர் பெற்றுள்ளார்.
மருத்துவ நிபுணர்களுக்கான பாதுகாப்பான பணி நிலைமைகள் மற்றும் நெறிமுறைகளை உருவாக்குவதற்காக கொடி அதிகாரி சமீபத்தில் உச்சநீதிமன்றத்தால் தேசிய பணிக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இளம் பெண்கள் ஆயுதப் படைகளில் சேர ஊக்குவிப்பதில் முன்னணியில் உள்ள ஆர்த்தி சரின், அரசின் பெண் சக்தி முன்முயற்சியின் பிரகாசமான அடையாளமாக திகழ்கிறார் என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.