இழப்பீடு வழங்கும் நோக்கில் வழங்கப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைக்கும் தனது மனைவி பார்வதியின் முடிவை மதிப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மைசூரு நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் (முடா) இழப்பீடாக வழங்கிய நிலங்களை எனது மனைவி பார்வதி திருப்பி அளித்துள்ளார். என் மீது அரசியல் வெறுப்புணர்வை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் பொய் புகாரை உருவாக்கி எனது குடும்பத்தை சர்ச்சைக்கு இழுத்தது மாநில மக்களுக்கும் தெரியும்.
இந்த அநீதிக்கு அடிபணியாமல் போராடுவதே எனது நிலைப்பாடாக இருந்தது. ஆனால், எனக்கு எதிராக நடக்கும் அரசியல் சதியால் மனமுடைந்த என் மனைவி, நிலங்களை ஒப்படைக்கும் முடிவை எடுத்திருப்பது என்னையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
எனது 40 ஆண்டு கால அரசியலில் அவர் தலையிட்டதில்லை. குடும்பம்தான் அவருக்கு எல்லாம். அப்படிப்பட்டவர், எனக்கு எதிரான வெறுப்பு அரசியலுக்கு பலியாகி, உளவியல் சித்ரவதைக்கு ஆளாகியுள்ளார். அதற்காக வருந்துகிறேன். இருப்பினும், மனைகளை திருப்பித் தர என் மனைவி எடுத்த முடிவை நான் மதிக்கிறேன்” என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.