தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு புதிதாக எந்த நிபந்தனையும் விதிக்கக் கூடாது : ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு புதிதாக எந்தவொரு நிபந்தனையும் விதிக்கக் கூடாது என்றும், ஏற்கெனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றி அனுமதி வழங்க வேண்டும் என்றும் போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜயதசமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 58 இடங்களில் வரும் அக்.6-ம் தேதி ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், 42 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டு விட்டது என்றும், 16 இடங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, “அனுமதி மறுக்கப்பட்ட இடங்களில் அனுமதி வழங்குவது குறித்தும், ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்ட இடங்களில் புதிதாக விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்துவது குறித்தும் போலீஸார் மீண்டும் பரிசீலி்க்க வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், “அனுமதி மறுக்கப்பட்ட 16 இடங்களில் 10 இடங்களில் அணிவகுப்பை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆவடி காவல் ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ள மாங்காடு, கொரட்டூர், தாம்பரம் காவல் ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ள மேடவாக்கம், சேலையூர், கோவை ரத்தினபுரி, தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் ஆகிய இடங்களில் அணிவகுப்பை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், “மாங்காடு, ரத்தினபுரி, கொரட்டூரில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகங்கள் ஆர்எஸ்எஸ் பொதுக் கூட்டத்தை தங்களது பள்ளி வளாகத்தில் நடத்த அனுமதி வழங்க மறுத்துள்ளது என்பதால் அந்த இடங்களிலும், மேடவாக்கத்தில் மெட்ரோ ரயில் பணி நடைபெறுவதாலும், சேலையூரில் பேருந்து செல்லும் மெயி்ன்ரோட்டில் அணிவகுப்பு நடத்த அனுமதி கோரியதாலும், குலசேகரப்பட்டினத்தில் தசரா பண்டிகை நடந்து வருவதால் சாயர்புரத்திலும் அனுமதி வழங்கவில்லை” என விளக்கமளித்தார். அதையடுத்து நீதிபதி, ‘‘ஒரு குறிப்பிட்ட மதத்தினர் வாழும் பகுதி. எதிர்கொள்கை கொண்ட பகுதி எனக் கூறி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க மறுக்கக்கூடாது. பொது சாலை என்பதற்காகவும் அனுமதி மறுக்கக்கூடாது.

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக கடந்த ஜனவரி மாதமே இந்த நீதிமன்றம் நிபந்தனைகளை வகுத்து விரிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த நிபந்தனைகளைப் பின்பற்றி இனிவரும் காலங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க வேண்டும். அதேபோல புதிதாக எந்தவொரு நிபந்தனைகளையும் விதிக்கக் கூடாது.

அனுமதி மறுக்கப்பட்டுள்ள மாங்காடு, ரத்தினபுரி மற்றும் கொரட்டூர் பள்ளி நிர்வாகத்திடம் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கடிதம் வாங்கி கொடுத்தால் அங்கு அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும். சாயர்புரத்தில் வரும் அக்.20-ம் தேதியன்று ஊர்வலம் நடத்த முடிவு செய்துள்ளதால் அங்கு அனுமதி வழங்க வேண்டும். கடந்தாண்டு சேலையூரில் ஊர்வலம் நடத்தப்படாத நிலையில் சிட்லபாக்கத்தில் அனுமதி கோரினால் அனுமதி வழங்க வேண்டும். மேடவாக்கத்தில் மாற்று வழியில் ஊர்வலம் செல்ல அனுமதி வழங்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.