கடலூரில் வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் பணி இறக்கத்தை எதிர்த்து விடுப்பு எடுத்து ஆட்சியரிடம் மனு

கடலூர் மாவட்டத்தில் 3 வட்டாட்சியர்கள் மற்றும் ஒரு துணை வட்டாட்சியர் பணி இறக்கம் செய்யப்பட்டதை கண்டித்து வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

கடலூர் மாவட்டத்தில் வருவாய் துறையில் பணியாற்றி வந்த 3 வட்டாட்சியர்கள் மற்றும் ஒரு துணை வட்டாட்சியர் ஆகியோர் பணி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து இன்று தமிழ்நாடு வருவாய்த்துறை (குரூப்- 2) நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தினர் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்தனர்.

வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர் சங்கத்தினர் மாநிலத் தலைவர் சையது அபுதாஹிர் தலைமையில் மாவட்ட தலைவர் உதயகுமார், மாவட்ட செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு சென்று கோரிக்கை மனு ஒன்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்தனர்.

அந்த மனுவில், அரசு விதிகளின்படி விடுப்பு அளித்தும், நேரடி நியமன 3 வட்டாட்சியர்களை பதவி இறக்கம் செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விடுப்பு விண்ணப்பத்தினை ஏற்று வட்டாட்சியர் பணி இறக்க ஆணையை ரத்து செய்து, திருந்திய ஆணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், துணை வட்டாட்சியர் பணியிடம் 8 காலியிடமிருந்தும் நேரடி நியமன துணை வட்டாட்சியரை பதவி இறக்கம் செய்து பிறப்பித்த ஆணையை ரத்து செய்து மீள ஆணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.