முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் என்பதை தவிர உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்கப்பட்டது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள எல். முருகன், “குடும்ப அரசியல் நடத்தும் கட்சி திமுக என்பது மீண்டும் நிரூபனமாகி இருக்கிறது. திமுகவில் கருணாநிதி முதல்வராக இருந்தார். அவருக்குப் பிறகு அவரது மகன் மு.க.ஸ்டாலின் முதல்வராக இருக்கிறார். அவருக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் முதல்வராவார். அவருக்குப் பின் உதயநிதியின் மகன் முதல்வராவார்.
குடும்ப அரசியல், வாரிசு அரசியல் மீது அவர்களுக்கு உள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது. உதயநிதி ஸ்டாலின் தற்போது துணை முதல்வராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மு.க.ஸ்டாலினின் மகன் என்பதைத் தவிர வேறு எந்த தகுதியும் இல்லாதவர் அவர். திமுகவில் இருக்கும் பல்வேறு மூத்த தலைவர்கள் தற்போது அதிருப்தியில் இருக்கிறார்கள்.
ஆனால், நமது பிரதமர் நரேந்திர மோடி, நாட்டை கட்டமைக்க அரசியல் பின்னணி இல்லாத குடும்பங்ளைச் சேர்ந்த 10 லட்சம் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். தொலைநோக்கு சிந்தனை உள்ள தலைவர் ஒருவரின் சிந்தனை எப்படி இருக்கிறது என்பதையும், குடும்ப, வாரிசு அரசியல் செய்பவர்களின் சிந்தனை எப்படி இருக்கிறது என்பதையும் இது காட்டுகிறது.” என தெரிவித்தார்.
சனாதன தர்மத்தை கடுமையாக எதிர்த்த ஒருவர் துணை முதல்வர் எனும் முக்கிய பொறுப்புக்கு வந்திருப்பதை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த எல். முருகன், “திமுக எப்போதுமே சனாதன தர்மத்துக்கு எதிரானது. கோயில்களுக்கு எதிரானது. எனவேதான், தமிழ்நாடு அரசு கோயில் நிர்வாகத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்து மதத்தில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, அவர்கள் அவமதிக்கிறார்கள். அவ்வாறு அவமதித்த ஒருவரை துணை முதல்வராக்கி இருக்கிறார்கள். மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். தேர்தல் வரும்போது தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று எல்.முருகன் குறிப்பிட்டார்.