மதுரையில் ஒரே நேரத்தில் 8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் : பெற்றோர் திரண்டதால் பரபரப்பு

மதுரையில் ஒரே நேரத்தில் மத்திய அரசுப் பள்ளி உள்ளிட்ட 8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். பள்ளி வளாகங்களில் பெற்றோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் நரிமேடு பகுதியில் செயல்படும் மத்திய அரசுக்கு சொந்தமான கேந்திர வித்யாலயா மற்றும் மதுரை பொன்மேனி ஜீவனா ஸ்கூல் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக இ-மெயில் மூலம் காவல்துறையினருக்கு இன்று காலை மின்னஞ்சல் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து மதுரை மாநகர வெடிகுண்டு தடுப்புப் பிரிவினருக்கு மாநகர காவல்துறை அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

வெடிகுண்டு தடுப்புப் பிரிவு ஆய்வாளர் ராமசாமி தலைமையில் அப்பிரிவினர் மோப்ப நாய் உதவியுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் தீவிர சோதனை மேற்கொண்டனர். 11 மணி வரை 3 பள்ளிகளில் நடத்திய சோதனையில் எவ்வித வெடி பொருட்களும் சிக்கவில்லை. தொடர்ந்து அடுத்தடுத்த பள்ளிகளிலும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த பெற்றோர் மிரட்டல் விடுத்த பள்ளி வளாகங்களில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில், பெற்றோர் யாரும் பதற்றம் அடைய வேண்டாம். வதந்தி ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டவர்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டலுக்கு உள்ளான பள்ளி நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் உறுதியளித்துள்ளனர். மதுரையில் தற்போது, காலாண்டு தேர்வு நடக்கும் நிலையில், பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெற்றோர், ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.