அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி ஷமீம் அகமது சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்த ஷமீம் அகமதுவை, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று காலை நடந்த பதவியேற்பு விழாவில் நீதிபதி ஷமீம் அகமதுவுக்கு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் உயர் நீதிமன்ற சக நீதிபதிகள், மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள் திரளாக பஙகேற்றனர். இதையடுத்து நீதிபதி ஷமீம் அகமது சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போதுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. இருந்தும், 8 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.
நீதிபதி ஷமீம் அகமது, அலகாபாத்தில் கடந்த 1966-ம் ஆண்டு பிறந்தவர். சட்டப்படிப்பை முடித்து 1993-ம் ஆண்டு வழக்கறிஞராக பணியைத் தொடங்கிய அவர் 2019-ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட ஷமீம் அகமதுவை, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் வரவேற்றுப் பேசினர். பின்னர் நீதிபதி ஷமீம் அகமது ஏற்புரையாற்றினார்.