ஆன்லைனில் அதிக வருவாய் கிடைக்கும் எனக் கூறி புதுச்சேரியில் ரூ.39.25 லட்சம் மோசடி செய்தவரை ஹைதராபாத்தில் புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர். அவரது வங்கி கணக்கில் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.13 கோடி வரை மோசடி செய்யப்பட்ட பணம் கையாளப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் கோபி ஆன்லைன் டிரேடிங்கில் அதிக வருமானம் கிடைக்கும் என இணைய வழி மோசடிக்காரர்கள் ஆசை வார்த்தை கூறியதைக் கேட்டு 39 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக அவர்களிடமிருந்து எந்த வருமானமும் இல்லை என்பதால் சைபர் க்ரைமில் புகார் செய்தார். அது சம்பந்தமாக முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டதில் 18 வங்கிக் கணக்குகளுக்கு கோபி பணம் அனுப்பி இருப்பது தெரியவந்தது.
அதில் பிஹார், டெல்லி, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வங்கிகளில் இணைக்கப்பட்டிருந்த மொபைல் எண்கள் விலாசம் தெரிந்ததால் முதுநிலை காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் சைபர் க்ரைம் ஆய்வாளர்கள் கீர்த்தி மற்றும் தியாகராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அதில் தலைமை காவலர் மணிமொழி, காவலர் அருண் வினோத் அடங்கிய தனிப்படை போலீஸார் நேற்று தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் சென்றனர். அங்கு இந்த வங்கிக் கணக்குகளை உபயோகித்த ரோஹித் பரிடே (26) என்ற நபரை விசாரித்ததில் அவருடைய வங்கி கணக்குக்கு கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 13 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட பணம் வந்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து தலைமை குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி இன்று சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் இன்னும் பல்வேறு வங்கி கணக்குகள் தொடர்பு இருப்பதால் அது சம்பந்தமாக கொல்கத்தா, டெல்லி, பிஹார் ஆகிய இடங்களுக்கு செல்லவும் சைபர் க்ரைம் போலீஸார் முடிவு செய்துள்ளனர்