“மணிப்பூர், சாதிவாரி கணக்கெடுப்பு போன்ற பிரச்சினைகளில் அமித் ஷா கவனம் செலுத்த வேண்டும்” – கார்கே

மணிப்பூர், மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு போன்ற தீவிரமான பிரச்சினைகளில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கவனம் செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மணிப்பூர், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு போன்ற தீவிரமான பிரச்சினைகளில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கவனம் செலுத்த வேண்டும். நகர்ப்புற சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்களில் 92% பேர் SC, ST, OBC பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று உங்கள் அரசாங்கத்தின் சொந்த கணக்கெடுப்பு கூறுகிறது.

மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அப்போதுதான், SC, ST, OBC உள்பட அனைத்து வகுப்பினரும் என்னென்ன செயல்பாடுகளால் சம்பாதிக்கிறார்கள் என்பது தெரியும். அவர்களின் பொருளாதார மற்றும் சமூக நிலை என்ன என்பதும், அரசு திட்டங்களின் பலன்களை அவர்கள் பெற எந்த வகையான இலக்கு தேவை என்பதும் புரியும். ஆனால், சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக பாஜக உள்ளது. அதேநேரத்தில், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது. இதை நாங்கள் வலியுறுத்திக் கொண்டே இருப்போம்” என்று கார்கே தெரிவித்துள்ளார்.