ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டங்களில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷங்கள் எழுப்பப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஹரியானாவின் பாட்ஷாபூரில் நடந்த பாஜகவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது: ஹரியானாவில் ஒரு புதிய போக்கு நிலவுவதை நான் பார்க்கிறேன். காங்கிரஸ் பிரச்சார மேடைகளில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற முழக்கம் எழுப்பப்படுகிறது. எப்போதிலிருந்து காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று முழங்கத் தொடங்கினார்கள் என்று நான் ராகுல் காந்தியிடம் கேட்க விரும்புகிறேன். நீங்கள் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? சமரச அரசியலுக்காக காங்கிரஸ் பாராமுகமாக உள்ளது.
காஷ்மீர் இந்தியாவின் பகுதியா இல்லையா? சட்டப்பிரிவு 370 நீக்கப்படவேண்டுமா, வேண்டாமா? காங்கிரஸும் ராகுல் பாபாவும் சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வருவோம் எனக் கூறுகிறார்கள். ராகுல் காந்தியின் மூன்று தலைமுறைகளால் கூட அதனைத் திரும்பக்கொண்டுவர முடியாது. காஷ்மீரைக் காக்க ஹரியானாவின் இளைஞர்களும் நிறைய தியாகங்கள் செய்துள்ளனர். அதனை வீண்போக நாங்கள் விடமாட்டோம்.
வக்பு வாரியச் சட்டம் பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது இல்லையா? நாங்கள் அதனை மேம்படுத்தி சீராக்கி இந்த குளிர்கால கூட்டத்தில் நிறைவேற்றுவோம் என்று அமித் ஷா தெரிவித்தார். ஹரியானாவில் வரும் அக்.5ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்குகள் 8-ம் தேதி எண்ணப்படுகின்றன.