திருச்சி மத்திய சிறையில் விசாரணைக் கைதி உயிரிழப்பு : உறவினர்கள் மறியல்

திருச்சியில் மத்திய சிறையில் இருந்த விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முன்பு இன்று உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

திருச்சி முத்தரசநல்லூர் அருகிலுள்ள பளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திராவிட மணி (40). இவர் ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசு மதுபான பாட்டில்களை மறைத்து வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜீயபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து செப்.27-ம் தேதி திராவிட மணியை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைத்தனர்.

இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திராவிடமணிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. சிறை மருத்துவர் பரிசோதித்து விட்டு, உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்துள்ளார். இதைத் தொடர்ந்து திராவிடமணி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு திராவிட மணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். திராவிட மணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சவக்கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதை அறிந்த திராவிடமணியின் உறவினர்கள் சிறையில் போலீஸார் தாக்கியதால் தான் உயிரிழந்ததாகக் கூறி, அரசு மருத்துவமனை முன்பு நேற்று இரவும், இன்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

சிறையில் இருந்த விசாரணை கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திருச்சி கே.கே.நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.