மகாராஷ்டிராவின் தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியோடு முடிவடைவதால் மாநில தேர்தல் அதற்கு முன்பாக நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இதனையடுத்து தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலை நவம்பர் 26-க்கு முன் நடத்த வேண்டும். தற்போதைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவம்பர் 26, 2024 அன்று முடிவடைகிறது. மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அரசியல் கட்சிகள் மற்றும் அதிகாரிகள் உட்பட அனைத்து தரப்பினரையும் நாங்கள் சந்தித்தோம். தீபாவளி போன்ற பண்டிகைகளை மனதில் வைத்து மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் தேதிகளை அறிவிக்குமாறு கட்சிகள் எங்களிடம் கூறியுள்ளன.
ஜனநாயகத்தின் திருவிழாவிற்கு மஹாராஷ்டிரா சிறப்பான பங்களிப்பை வழங்கும் என்று நான் நம்புகிறேன். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 1,00,186 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். மகாராஷ்டிராவில் சில நகர்ப்புற மையங்கள் நாட்டிலேயே குறைந்த வாக்கு சதவீதத்தை பதிவு செய்து வருகின்றன. எந்தவொரு வேட்பாளருக்கும் குற்றப் பின்னணி உள்ளதா என்பதை அறிந்து கொள்வது வாக்காளர்களின் உரிமை; கட்சிகளும் அதனை தெரிவிக்க வேண்டும். மகாராஷ்டிராவில் நேர்மையான சட்டமன்றத் தேர்தலை உறுதி செய்வதற்காக அனைத்து ஹெலிகாப்டர்களிலும் சோதனை நடத்தப்படும்” என தெரிவித்தார்.
கடந்த முறை ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலோடு மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலும் இணைத்து நடத்தப்பட்டது. ஆனால், இம்முறை தனித்தனியாக நடத்தப்படுகிறது. இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ராஜீவ் குமார், “கடந்த முறை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தல்கள் ஒன்றாக நடந்தன. அந்த நேரத்தில், ஜம்மு காஷ்மீர் ஒரு காரணியாக இல்லை. ஆனால் இந்த ஆண்டு நான்கு தேர்தல்கள். இதற்குப் பிறகு உடனடியாக ஐந்தாவது தேர்தலும் வர உள்ளது. எனவே, படைகளின் தேவையை பொறுத்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா தேர்தல்களை ஒன்றாக நடத்த முடிவு செய்துள்ளோம்” என்றார்.